'குளுகுளு' என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகிறது சந்தானம் நாயகனாக நடிக்கும் புதுப்படம். லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றிய ரத்னகுமார் இயக்கும் படம் இது.
'மேயாத மான்', 'ஆடை' படங்களில் கவனம் ஈர்த்தவர். 'விக்ரம்', 'மாஸ்டர்' படங்களில் லோகேஷுடன் இணைந்து அவற்றுக்கான வசனங்களை எழுதியவர்.
இது வழக்கமான சந்தானம் படமாக இருக்காது. எனினும் அவரது ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக இருக்கும் என்கிறார் ரத்னகுமார்.
"எளிதான முறையில் சொல்வதாக இருந்தால் சந்தானம் இதுவரை என்ன செய்துகொண்டிருக்கிறாரோ, அதை இந்தப் படத்தில் அறவே தவிர்த்துள்ளார். அதுதான் இந்தப் படத்தை அவர் தேர்வு செய்யக் காரணம்.
"அதிக பேச்சு, வழக்கமான அதிரடி வசனங்கள், எதிராளியின் பேச்சுக்குப் பதிலடி என எதுவுமே இருக்காது. "ஒருவகையில் இது எதிர்மறை நகைச்சுவைப் படம் எனலாம். எனினும் பாமர ரசிகனும் ரசிக்கும்படியாக இருக்கும்," என்கிறார் ரத்னகுமார்.
அது என்ன 'குளுகுளு'?
"குளுகுளு என்பது குளிர்ச்சியை சுட்டிக்காட்டும். குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் படமா என்றும் கேட்காதீர்கள். என்னுடைய நாயகன் பயணத்தில் ஆர்வம் உள்ளவர். பல மாநிலங்கள், பல மொழிகள் பேசுபவர்களிடம் பேசிப்பழகுபவர். சக மனிதர்களைக் கடந்து எல்லா உயிரினத்திடமும் அன்பு காட்டுபவர். இதை மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என வலியுறுத்துவார். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உதவி செய்யக்கூடிய நல்ல மனசுக்காரர்.
"இதனால் என் நாயகன் சந்திக்கும் மனிதர்கள், உதவி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள், அதன் பின்விளைவுகள் என எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டிருக்கும்," என்கிறார் ரத்னகுமார்.
சந்தானத்திடம் இருபது நிமிடங்கள் போல் கதையை விவரித்தாராம். உடனே அதில் நடிக்க சம்மதித்துள்ளார்.
"அவரே தயாரிப்பாளரிடம் நேரடியாக சம்மதம் தெரிவித்ததும் மளமளவென்று வசனங்கள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தேன். உடனே பாராட்டு தெரிவித்தார்.
"கதைப்படி கூகல் என்பதுதான் அவரது கதாபாத்திரத்தின் பெயர். அவரைச் சுற்றி எப்போதும் நான்கைந்து பேர் இருப்பார்கள். எதைப் பற்றி கேட்டாலும் பதில் சொல்வார். பல மொழிகள் தெரியும். அவருடைய தாயார் ஆங்கிலம் மட்டும் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். இது தொடர்பான வசனங்கள் பிரமாதமாக அமைந்துள்ளன.
"சந்தானம் சார் இல்லாமல் பத்து முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன. எல்லாருக்கும் ஒரு கதை இருக்கும். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும். அவர்கள் எல்லாருடைய வாழ்க்கையையும் சந்தானம் கடந்து போயிருப்பார்.
"ஒரு கதாநாயகனாக சந்தானத்தைக் கையாள்வதில் எந்தவிதமான சிரமமும் இருப்பதாக நான் உணரவில்லை. முன்பே திட்டமிட்டபடி செயல்பட்டதால் குழப்பம் இல்லாமல் வேலை பார்க்க முடிந்தது.
"தாம் நடிக்காத காட்சிகளிலும் மிகுந்த அக்கறை காட்டுகிறார். நேரம் இருந்தால் அந்தக் காட்சிகள் படமாக்கப்படுவதை பார்ப்பார்.
"ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மெருகேற்றுவது தொடர்பாக தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதும் அவரது வழக்கம்.
"கதாநாயகி அதுல்யா சந்திரா மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளார். தெலுங்கில் இரண்டு படங்கள் முடித்த அனுபவமும் உண்டு. 'மெட்டில்டா' என்ற வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பெண்ணின் கதாபாத்திரத்துடன் நன்றாகப் பொருந்தி உள்ளார்.
இன்னொரு நாயகியாக நமீதா கிருஷணமூர்த்தி நடித்துள்ளார். இதுதான் அவருக்கு முதல் படம். இருவரது கதாபாத்திரங்களும் நிச்சயம் ரசிகர்களின் மனதில் பதியும். மொத்தத்தில் இம்முறை சந்தானம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு படத்தைத் தரப்போகிறார்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ரத்னகுமார்.
, :
சந்தானம்

