போனி கபூரை திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்த நிலையில், அவரிடம் நடிகர் அஜித்தின் 61ஆவது படத்தின் அண்மைய தகவலை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் வாய் திறப்பதாக இல்லை. இந்நிலையில் போனிகபூர் தயாரிப்பில் ஐஸ்வர்யா ஒரு படம் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையும் அவர் உறுதிப்படுத்தவில்லை. 'வை ராஜா வை', போன்ற படங்களை இயக்கியுள்ளார்் ஐஸ்வர்யா. அவரது புதுப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.
'விக்ரம்' படம் மூலம் கிடைத்த மிகப்பெரும் லாபத்தை மீண்டும் சினிமா தயாரிப்பில் முதலீடு செய்யும் முடிவில் இருக்கிறார் கமல்ஹாசன். இவரது ராஜ் கமல் பிலிம்ஸ் பட நிறுவனம் இதற்கு முன்பு மற்ற நடிகர்களில் சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', மாதவன் நடித்த 'நள தமயந்தி', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களை மட்டுமே தயாரித்துள்ளது. மற்ற அனைத்தும் கமல் நடித்த படங்கள்தான். தற்போது அவரது நிறுவனம் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிக்கும் படங்களைத் தயாரிக்க உள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த், விஜய் நடிக்க உள்ள படங்களையும் தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. ரஜினி கிட்டத்தட்ட ஒப்புதல் வழங்கிவிட்டதாகத் தகவல். மேலும், நாயகியை முன்னிலைப்படுத்தும் ஒரு கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகத் தகவல்.
இயக்குநர் ஜி.எம்.குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 1986ம் ஆண்டு சிவாஜி புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் பிரபு கதாநாயகனாக நடித்த 'அறுவடை பூக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்ட ஜி.எம்.குமார், 'பிக்பாக்கெட்', 'இரும்புப் பூக்கள்', 'உருவம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்', பாலா இயக்கிய 'அவன் இவன்' உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்புத் திறமையை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தன. இந்த நிலையில் நடிகர் ஜி.எம்.குமார் தற்போது திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹாலிவுட் வெளியீடான 'தி கிரே மேன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இதில் தனுஷுக்கு கனமான கதாபாத்திரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியில் 'ராஞ்சனா', அமிதாப்பச்சனுடன் இணைந்து 'ஷமிதாப்', அக்ஷய் குமாருடன் 'அட்ராங்கி ரே' ஆகிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ்.
அடுத்தகட்டமாக ஹாலிவுட்டிலும் நுழைந்துள்ளார். ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவான 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் சிறிது நேரமே திரையில் வந்தாலும் அவரது சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் 'தி கிரே மேன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். ஏற்கெனவே தனுஷ் நடிப்பை ரியான் காஸ்லிங், கிரிஸ் எவான்ஸ் ஆகியோரும் இயக்குனர்களும் பாராட்டி உள்ளனர். எனவே இரண்டாம் பாகத்தில் தனுஷுக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரம் கிடைக்கக்கூடும்.

