திரைக்கதையில் உணர்வு இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது என்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
'குருதி ஆட்டம்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசியபோதே மிஷ்கின் இவ்வாறு குறிப்பிட்டார்.
இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. நாயகியாக ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இப்படம் திரைகாணும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. இதையடுத்து அடுத்த வாரம் வெளியிட உள்ளனர்.
"எனது உதவியாளராக இருந்த ஸ்ரீ கணேஷ் அறத்துடன் வாழும் நல்ல மனிதர். அவருடைய முதல் படம் மிகச்சிறப்பான படைப்பாக அமைந்துள்ளது.
"படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஓர் உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது. ஸ்ரீ கணேஷ் உணர்வுபூர்வமான நல்ல மனிதரும்கூட. அவருடைய அந்த நல்ல எண்ணங்கள்தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது. எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம்தான் எடுப்பார்கள். "இந்தப் படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார். பல தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் அறிமுகமாகிறார்கள். அனைவரும் இந்தப் படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்," என்றார் மிஷ்கின்.
அடுத்து பேசிய அதர்வா, படத்தின் தயாரிப்பாளர் முருகானந்தத்தின் ஒத்துழைப்பால்தான் படம் மிக அழகாக உருவாகியுள்ளது என்றார்.
"இந்தப் படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கணேஷ் இந்த கதையைச் சொல்லும் போது, அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.
"அந்தக் கதையை மிக நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். ஒவ்வொரு சிறு விஷயத்திலும் மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரும் பலம் சேர்த்துள்ளது. இசையும் நல்ல இயக்கம் ஆகிய அனைத்து அம்சங்களும் வெற்றியைத் தேடித் தரும்," என்றார் அதர்வா.

