முதன் முறையாக சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில், அவரை நேரில் சந்தித்து கதை சொல்லி இருக்கிறார் முருகதாஸ். அது பிடித்துப்போகவே இருவரும் கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும்.
அமாவாசை தினத்தையொட்டி நடிகை பிரணிதா தனது கணவருக்கு பாத பூசை செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'உதயம்', 'சகுனி', 'மாஸ்', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' போன்ற பல படங்களில் நடித்த பிரணிதா பின்னர் தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து அவருக்கு திருமணமானது. அதன் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டாலும், சமூக ஊடகங்கள் வழி அவர் அடிக்கடி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அமாவாசை தினத்தன்று கணவருக்கு அவர் பாத பூசை செய்துள்ளார். அவருக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நடிகை அனுஷ்கா மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் ஒருவர் சொன்ன கதை பிடித்துப் போய் அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரிக்க சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளதாம். உடல் பெருத்துப் போனதால் அவதிப்பட்டவர் மீண்டும் அதே முயற்சியில் ஈடுபட இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

