அண்மையில் வெளியான 'வட்டம்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பி உள்ளார் அதுல்யா ரவி.
பெரிய வெற்றிப் படத்தை கொடுக்காவிட்டாலும்கூட தமக்கான வாய்ப்புகள் தொடர்ந்து தேடி வருவது உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கிறது என்கிறார் இந்த இளம் நாயகி.
தமது முகப்பொலிவைக் கூட்டுவதற்காக இவர் 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என்று குறிப்பிடுபவர், இயற்கையான அழகு இருக்கும்போது தாம் செயற்கையை நாட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
"என் பெற்றோர் அழகான பெண்ணாகவே என்னைப் பெற்றெடுத்து, வளர்த்துள்ளனர். எனவே அறுவை சிகிச்சை மூலம் நான் அழகாக மாறத் தேவையில்லை. மேலும், அதுபோன்ற செயற்கை அழகுக்காக நான் சிகிச்சை பெறுவதை என் தந்தை அனுமதிக்க மாட்டார்.
"வீட்டில் நான் அப்பா செல்லம். அப்பாவுக்கு என் மீது அளவுக்கு அதிகமான பாசம் என்பதால் என் உடலில் சின்னதாக ஒரு கீறல் ஏற்பட்டாலும்கூட துடித்துப் போய்விடுவார்," என்கிறார் அதுல்யா.
அண்மையில் எடுக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களில் அதுல்யாவின் முகம், குறிப்பாக அவரது மூக்கு முன்னைவிட அழகாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாவே அவர் தமது அழகை மெருகேற்றும் வகையில், சிகிச்சை பெறுவதாக தகவல் பரவி உள்ளது.
"இதில் ரகசியம் ஏதும் இல்லை. காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து காலை 6 மணிக்கு அதை முகத்தில் தடவிக்கொள்வேன். அரைமணி நேரம் கழித்து, சுடுநீரில் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பிறகு உடற்பயிற்சி, யோகா செய்வேன்.
"மேலும், உணவில் வறுத்த, பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுகிறேன். இவ்வளவுதான் எனது அழகின் ரகசியம்," என்று சொல்லும் அதுல்யா, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை.
ஆனால் இவரது தந்தை அஜித்தின் ரசிகராம். இருவரது புதுப்படங்கள் வெளியாகும்போது தந்தையும் மகளுமாக திரையரங்கம் சென்று, அந்தப் படங்களைப் பார்த்துவிடுவார்களாம்.
"விஜய், அஜித் இருவரது படங்களையும் ரசித்துப் பார்ப்போம். ஆனால் வீட்டுக்குள் யார் நல்ல நடிகர், யாருக்கு செல்வாக்கு அதிகம் என்கிற அரசியல் எல்லாம் இருக்காது. தவிர, எனக்கும் அப்பாவுக்கும் சண்டை ஏற்பட வாய்ப்பே இல்லை. என்னை அவர் தேவதையாகத்தான் பார்க்கிறார். எனக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார்.
"விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா என்று ரசிகர்கள் பலர் தொடர்ந்து கேட்கிறார்கள். அது எப்போது நடக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஒருநாள் விஜய்யுடன் திரையைப் பகிர்ந்துகொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
"காதல் கண் கட்டுதே' படத்தில் நடித்தபோது அது முழு நீள திரைப்படம் என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல், விவரம் அறியாமல்தான் நடித்தேன். இப்போது எது நல்ல கதை, நல்ல படம் என்பதை ஓரளவு அனுமானிக்க முடிகிறது.
"இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதே பெரிய விஷயம். எனவே காலம் நமக்கான எதிர்காலத்தில் என்ன வைத்திருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் அதுல்யா.
'நாடோடிகள்-2', 'என் பெயர் ஆனந்தன்', 'முருங்கைக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் கோடம்பாக்கத்தில் தனது பயணத்தை மீண்டும் திட்டமிட்ட பாதையில் மேற்கொண்டு வரும் அதுல்யாவுக்கு, நடிகை ஆண்ட்ரியாவை மிகவும் பிடிக்குமாம். ஆண்ட்ரியாவின் குரலுக்கும் நடிப்புக்கும் தாம் பெரிய ரசிகை என்கிறார்.
"இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். 'வட்டம்' படத்தில் அவருடன் இணைந்து நடித்தது இனிய அனுபவம். கதைப்படி அவர் மிக துணிச்சலான பெண். ஒரு காட்சியில் கெட்ட வார்த்தையைக்கூட பயன்படுத்தி இருப்பார்.
"இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, 'அதுல்யா ரொம்ப அழகாக இருக்கிறார்' என்று வெளிப்படையாகப் பேசினார். இதுபோன்ற பெரிய மனம் யாருக்கு வரும்? இந்தப் படத்தில் நானும் அவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளே இல்லை. ஆனாலும் அவரது அன்பை என்னால் உணர முடிகிறது," என்கிறார் அதுல்யா ரவி.