'விக்ரம்' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர்கள் ரஜினி, விஜய், சிரஞ்சீவி, சல்மான்கான் என்று ஏராளமானோர் தம்மைத் தொடர்புகொண்டு பேசியதாகச் சொல்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
மலையாளத் திரையுலகில் இருந்து நிறைய பேர் பாராட்டினார்களாம். நடந்தது அனைத்தும் ஒரு கனவுபோல், ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்.
"நான் இதுவரை இயக்கிய நான்கு படங்களையுமே ரஜினி சார் பார்த்துள்ளார். ஒவ்வொரு படத்தையும் உடனடியாக விமர்சனம் செய்து, பாராட்ட வேண்டிய அம்சங்களை மறக்காமல் சொல்வார். இந்த முறை 'விக்ரம்' படத்தை முதல்நாள் இரவே பார்த்துவிட்டுப் பாராட்டினார். பிறகு இரண்டாவது முறை பார்த்துவிட்டு, தொடர்புகொண்டு பேசியதை மறக்கவே இயலாது.
"விஜய் அண்ணா முதல் நாளன்று முதல் காட்சியைப் பார்த்துள்ளார். அன்றைய தினம் எனது கைபேசி இணைப்பில் ஏதோ தொழில்நுட்ப பாதிப்பு. அதனால் யாராலும் என்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் விஜய் சார் வாழ்த்து கூறி அனுப்பிய குறுந்தகவலை பார்க்க முடியவில்லை. அவரும் 'விக்ரம்' படத்தை இருமுறை பார்த்தாராம்.
"நடிகர் சிரஞ்சீவி வீட்டுக்கே அழைத்துப் பாராட்டினார் என்றால் சல்மான்கான், உடனடயாக தொடர்பு கொண்டு பேசினார்," என்று சொல்லும்போது லோகேஷ் முகத்தில் ஒருவித பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் பார்க்க முடிகிறது.
ராம் சரண், அல்லு அர்ஜுன், யஷ் என்று மேலும் பலர் வாழ்த்தி உள்ளனர். வெற்றிகளுக்குப் பிறகும் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க தாம் மறப்பதில்லை என்று குறிப்பிடுபவர், தாம் இயக்கிய முதல் குறும்படத்துக்குக் கிடைத்த முதல் கைத்தட்டல்கள்தான் தன் வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது என்கிறார்.
"சில விஷயங்கள் நமக்கு நடந்தால்தான் ஆச்சரியமாக நினைக்கத் தோன்றும். நான் எங்கிருந்து வந்தேன் என்று பழைய நினைவுகளையும் புரட்டிப் பார்க்கிறேன். இவ்வாறு நினைத்துப் பார்ப்பதை விட்டுவிடக்கூடாது என்பதுதான் நல்ல சினிமாவுக்கான முயற்சியாகவும் இருக்கும்," என்று சொல்கிறார் லோகேஷ்.
இவர் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக வெளியான தகவலில் பாதி உண்மை உள்ளதாம். அந்தப் படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்ததை ஒப்புக்கொள்பவர், எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்கிறார்.
"ரஜினி உச்ச நட்சத்திரம். அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல. எனது படங்களை அவர் பாராட்டினார் என்பதால், எனது இயக்கத்தில் நடிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சில விஷயங்கள் தன்னால் நடக்கும் என்பார்கள். அதை எப்போதும் மனதில் வைத்திருப்பேன்.
"வாய்ப்பு கிடைத்தால் ஒரே படத்தில் ரஜினி, கமல் இருவரையும் நடிக்கவைப்பேன். அதிலும் ரஜினி நாயகன், கமல்ஹாசன் வில்லன் என்பதுதான் என் திட்டம். கமல் நடித்த 'குருதிப்புனல்' படத்தின் தாக்கம் இன்றளவும் மனதில் உள்ளது. அதுபோன்ற ஒரு படத்தை இயக்கும் ஆசை உள்ளது.
"ரஜினி, கமல் இருவரையும் இயக்க வேண்டும். ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோருடன் ஒரு படத்திலாவது பணியாற்றவேண்டும் என நிறைய ஆசைகள் உள்ளன," என்கிறார் லோகேஷ் கனகராஜ்.

