திரையுலகில் வெற்றி, தோல்வி என்பது இயல்பாக நடக்கக்கூடியது என்கிறார் நடிகை தமன்னா.
அதேசமயம் வெற்றி, தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனது நீண்ட திரைப் பயணத்தில் பல்வேறு முக்கியமான தருணங்களைக் கடந்து வந்திருக்கிறேன். வெற்றி பெற்ற தருணங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சி தந்தனவோ, அதற்கு இணையாக தோல்விப் படங்கள் குறித்து மனம் வருந்தி இருக்கிறேன்.
"வெற்றி, தோல்விகளை தனியாக எதிர்கொள்வது மிகக் கடினமானது. என் விஷயத்தில் அவற்றை எதிர்கொள்ள எனது குடும்பத்தார் உடன் இருந்தனர். பல்வேறு உதவிகளைச் செய்தனர்.
"நான் பிரச்சினைகளை எதிர்கொண்ட சமயங்களில் எல்லாம் என்னை விட்டு விலகிச் செல்லாமல், பக்கபலமாக உள்ளனர். நான் பலருக்கு கூறியுள்ள அறிவுரையை நானும் பின்பற்றுகிறேன்.
"அதை விவரிப்பது எளிது. திரை வாழ்க்கையில் ஏற்படக்கூடிய வெற்றி, தோல்விகளை நம் தனிப்பட்ட வாழ்வின் நிகழ்வுகளாகக் கருதக்கூடாது. இது திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடிய அறிவுரை.
"நான் ஒரு நடிகை என்ற வகையில் இந்த உண்மையைப் புரிந்துகொண்டிருக்கிறேன். இந்தப் புரிதல் மிக அவசியமானது. என்னைச் சுற்றிப் பல விஷயங்கள் நடக்கக்கூடும். ஆனால் என்ன நடந்தாலும், என்னைப் பற்றி நானே குறைவாக மதிப்பிட்டதில்லை. நானே என்னை மதிக்கவில்லை என்றால் மற்றவர்களைக் குறை சொல்லிப் பலன் இல்லை," என்கிறார் தமன்னா.
ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதை தமன்னா உறுதி செய்யவில்லை என்றாலும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க ஹைதராபாத் சென்றுள்ளதாகத் தகவல்.
இதற்கிடையே நடிகை ஷ்ருதிஹாசனும் தன் பங்குக்குச் சில அறிவுரைகளைக் கூறியுள்ளார்.
சினிமா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகமும் ஆணாதிக்கத்தில்தான் உள்ளது என்றும் இந்த நிலை எப்போது மாறும் என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆணாதிக்கத்தைக் கடந்துதான் பெண்கள் சாதிக்க வேண்டியதுள்ளது. திரையுலகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
"பெரிய நட்சத்திரங்களின் வாரிசுகளுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. இதுகுறித்து நான் பலமுறை தெளிவான விளக்கங்களை அளித்துள்ளேன்.
"முன்னணி நட்சத்திரங்களின் வாரிசு களுக்கு தொடக்கத்தில் சில வாய்ப்புகள் எளிதில் அமையும் என்பது உண்மைதான். ஆனால் வாரிசு என்ற ஒரேயொரு தகுதி மட்டும் வெற்றிபெற போதுமானது அல்ல. தனிப்பட்ட திறமைகள் இருக்கவேண்டும். அப்போதுதான் முன்னேறிச் செல்ல முடியும்," என்கிறார் ஷ்ருதிஹாசன்.
இல்லையெனில் வெற்றி, தோல்விகள் ஒருவரை எளிதில் கவிழ்த்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள அவர், திரையுலகில் அறிமுகமானது முதல் இன்று வரை தமக்கு யாரும் சிபாரிசு செய்ததில்லை என்கிறார்.
மேலும் தன் தந்தை உட்பட யாரிடமும் தமக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டதில்லை என்றும் சொல்கிறார்.
"இப்போதும்கூட எனது சொந்தக்காலில்தான் நிற்கிறேன். வெற்றி, தோல்விகள் என பலவற்றைக் கடந்து வந்திருக்கிறேன்.
"கடந்த கால தோல்விகள் குறித்து கவலைப்படுவதால் நேரம்தான் கடந்து போகும். எனவே, புதிய வாய்ப்புகள், கதாபாத்திரங்கள் தேடி வரும்போது அவற்றில் கவனம் செலுத்துகிறேன்," என்கிறார் ஷ்ருதிஹாசன்.
, :
தமன்னா

