விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 'கொலை'. ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி என இரு நாயகிகள் உள்ள இந்தப் படம் உலகத்தரத்தில் உருவாகி உள்ளதாகச் சொல்கிறார் விஜய் ஆண்டனி.
பாலாஜி குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படக்குழுவினர் சென்னையில் இசை வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பேசிய விஜய் ஆண்டனி, உலகத் தரமான ஒரு படத்தில் பணியாற்றியதை நினைத்து தாம் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
"எந்த படத்துக்குமே முழுப்பொறுப்பு இயக்குநர்தான். அவருக்குத் தூணாகவும் துரும்பாகவும் இருப்பதுதான் என்னைப் போன்ற கலைஞர்களின் முக்கிய வேலை. இந்தப் படத்தின் மூலம் பாலாஜி என்ற தரமான இயக்குநர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.
"அவருடைய கனவுதான் 'கொலை' என்ற படமாக உருவாகி உள்ளது. அவர் மீதான நம்பிக்கையின் பேரிலேயே உலகத்தரத்தில் ஒரு படம் உருவாகி இருப்பதாகச் சொல்கிறேன்.
"இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரங்கள். அவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அத்தகையவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓர் இசையமைப்பாளராக, இந்தப் படத்தின் இசையமைப்பாளருடைய பணி மிகவும் பிடித்திருக்கிறது. நாயகிகள் ரித்திகா, மீனாட்சி ஆகிய இருவருடனும் பணிபுரிந்தது நல்ல அனு பவம். இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்," என்று அளவோடு பேசி முடித்தார் விஜய் ஆண்டனி.
நாயகி ரித்திகா பேசுகையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
"இந்தப் படத்தின் கதையைக் கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களில் நான் கதைக்குள் ஆழமாகப் போய்விட்டேன். கதையின் முடிவை உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன். அந்த அளவுக்கு சுவாரசியமான கதை, திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர்," என்றார் ரித்திகா சிங்.
இதுபோன்ற தருணத்துக்காகவே தாம் பல ஆண்டுகளாகக் காத்துக்கிடந்ததாக இயக்குநர் பாலாஜி குமார் குறிப்பிட்டார்.
"இந்தப் படம் உருவாக மிக முக்கியமான காரணம் விஜய் ரத்தினமும் விஜய் ஆண்டனியும்தான். இந்தக் கதையில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்புக்கொள்வாரா என சந்தேகமாக இருந்தது. ஆனால் கதையை வெகுவாகப் பாராட்டியதுடன், கேட்ட தேதிகளில் கால்ஷீட்டும் ஒதுக்கினார்.
"என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் பலம். அவர்கள் அனைவருமே கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் உழைத்தார்கள்," என்றார் இயக்குநர் பாலாஜி குமார்.

