காதல் கடிதத்துக்கு மவுசு

காதல் கடிதத்துக்கு மவுசு

3 mins read

'சீதா ராமம்' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார் அப்படத்தின் நாயகன் துல்கர் சல்மான்.

இந்தப் படத்தால் மீண்டும் காதல் கடிதம் எழுதும் பழக்கம் இளையர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்தப் படம் அழகான காதல் கதையுடன் உருவாகி உள்ளது. இதனால் இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படக் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். படத்துக்கு வசூல், விமர்சன ரீதியில் கிடைத்துள்ள நல்ல வரவேற்பை அடுத்து இந்தச் சந்திப்பு வெற்றி விழாவாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான், தமிழில் இதற்கு முன்பு வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் போலவே வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருப்பதால்தான் 'சீதா ராமம்' படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

"தமிழ் ரசி­கர்­கள் எப்­போ­துமே வித்­தி­யா­ச­மான படைப்­பு­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­பார்­கள். அது மீண்­டும் ஒரு­முறை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அங்­கீ­கா­ரத்­துக்­காக தமிழ் ரசி­கர்­கள் அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

"சீதா ராமம்' என்ற படமே ஒரு கனவு போன்றதுதான். இயக்குநர் ஹனு கதை சொல்லும்போது இது ஒரு காவியக் காதல் கதை என்பது மட்டும் புரிந்தது. இதற்கு முன் கேட்காத காதல் கதையாகவும் இருந்தது.

"கதையை முழுவதும் கேட்டு முடித்தபோது, வேறு படங்களின் தாக்கமோ அல்லது தழுவலோ இன்றி அச்சு அசலாக இருந்தது. காரணம், இயக்குநர் இந்தக் கதையை அவரது மனதின் ஆழத்தில் இருந்து எழுதியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு போர் போல் நடைபெற்றது.

"இதில் நான் ஏற்று நடித்த ராம் எனும் கதாபாத்திரம் என் வாழ்க்கையில் மறக்க இயலாத வேடமாக நிலைத்திருக்கும். அதன் தாக்கத்தில் இருந்து வெளிவர இன்னும் சற்று காலமாகும் என்று நினைக்கிறேன்.

"நான் நடித்த படத்தை நானே நான்கைந்து முறை பார்ப்பது அரிது. இந்தப் படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு முறையும் திரையில் ஒலிக்கும் இசை என்னை முழுதாக ஆக்கிரமிக்கிறது. 'சீதா ராமம்' படத்தை திரையரங்குகளுக்கு சென்று காண்பதில்தான் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதையும் உணர்ந்தேன்," என்றார் துல்கர் சல்மான்.

இந்தப் படத்தில் காதல் கடிதம் எழுதுவது தொடர்பான சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகளை இயக்குநர் விவரித்தபோது, இதெல்லாம் ஒத்துவருமா என்று யோசித்தாராம் துல்கர்.

"இப்போதெல்லாம் யாரும் காதல் கடிதங்கள் எழுதுவதில்லை என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினேன். அதனால் ரசிகர்கள் இதுபோன்ற காட்சி அமைப்பை ரசிப்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஆனால் காதல் கடிதங்களுக்கு இனி மவுசு இருக்கும்.

"ஆனால் இந்­தப் படத்­தைப் பார்த்­து­விட்டு ஏரா­ள­மா­ன­வர்­கள் மீண்­டும் காதல் கடி­தம் எழு­தத் தொடங்கி இருக்­கி­றார்­கள். ஏதே­னும் ஒரு தாளில் கடி­தம் எழுதி, அத­னைப் புகைப்­ப­ட­மாக எடுத்து, என்­னு­டைய சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­வி­டு­கி­றார்­கள். மின்­னி­லக்­கக் காதல் கடி­தம் இளை­யர்­கள் மத்­தி­யில் புதிய பழக்­கத்­தை­யும் ஆர்­வத்­தை­யும் ஏற்­ப­டுத்தி உள்­ளது. இது மகிழ்ச்சி அளிக்­கிறது.

"பட வெளியீட்டிற்கு முன்னர் இந்தப் படத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என தீர்மானிக்க இயலாமல் சற்றே தடுமாறினோம். ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்தி இருக்கலாமே என்று தோன்றியது. இருப்பினும் இந்தத் திரைப்படத்தை எதிர்பாராத வகையில் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி," என்றார் துல்கர் சல்மான்.