திரையுலகில் தனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தற்போது பொருளாதார சிக்கலில் இருப்பதை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார் ரஜினி.
கமல் நடித்த 'தசாவதாரம்' உட்பட பல படங்களைத் தயாரித்த ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் எந்தப் படத்திலும் ரஜினி நடித்ததில்லை. இத்தனைக்கும் அதன் உரிமையாளர் ரவிச்சந்திரன், ரஜினியின் நெருங்கிய நண்பர். இந்நிலையில் ரவிச்சந்திரன் பொருளாதார ரீதியில் முடங்கி இருப்பதை அறிந்த ரஜினி, தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்க உள்ளாராம். இந்தப் புதுப்படத்துக்காக தமது சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள ரஜினி முடிவு செய்துள்ளதாகத் தகவல். இதேபோல் பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தாருக்கு, தமது அடுத்த படத்தின் சம்பளத்தில் ஒரு பகுதியை தர உள்ளாராம்.
தனது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளார் சிவகார்த்திகேயன். முன்பு இயக்குநர் செல்வராகவன் 'ஒயிட் எலிபென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் இணைந்தனர். இப்போது அனிருத்தும் சிவாவும் அதேபோன்ற முயற்சியில் ஈடுபட உள்ளனர். வருடத்திற்கு ஒரு படம் தயாரித்தாலும் தரமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளனராம். இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிப்பதுடன், முழு சுதந்திரத்துடன் பணியாற்ற வழிவகை செய்ய உள்ளனர்.
'விருமன்' பட வசூல் கார்த்திக்கு பெரும் தெம்பளித்துள் ளது. இந்நிலையில், நடிகர் சங்க கட்டடத்துக்காக 'விருமன்' படத்தின் லாபத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் கார்த்தி. இதற்கான காசோலையை நடிகர் சூர்யா, நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார். முன்னதாக தேசிய விருது பெற்ற தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

