'தி கிரே மேன்' படத்தின் மூலம் ஹாலிவுட் நடிகராக உருவெடுத்துள்ளார் தனுஷ். இந்நிலையில் அப்படத்தை இயக்கிய 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர்களான ருஸ்ஸோ சகோதரர்கள் தனுஷின் நடிப்பையும் நடனத்தையும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
'தி கிரே மேன்' படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் ரூஸ்ஸோ சகோதரர்கள் 'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷின் நடிப்பு குறித்து விமர்சனம் செய்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான அப்படத்தில் மதுரை குண்டர் கும்பலில் ஒருவராக நடித்திருந்தார் தனுஷ்.
"தனுஷ் நடனத்தில் சிறந்தவர் என்பதை அப்படத்தைப் பார்த்தபோது உணர முடிந்தது. ஹாலிவுட் படத்தில் பணியாற்றிய பிறகு தனுஷின் மற்ற படங்களைப் பார்த்து வருகிறோம். கேமரா முன்பு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவரது அழகான மீசையும் கவர்கிறது," என அவர்கள் இருவரும் கூறியுள்ளனர்.

