நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்' திரைப்படம் இந்தியா
சார்பில் மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மறுபிறவி எடுக்கும் ஒரு எழுத்தாளனின் கதையாக உருவான இப்படத்தில் நடிகை சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதுடன் நடனத் திலும் தனி முத்திரை பதித் திருந்தார். பெரிதும் கவனிக்கப் பட்ட இப்படம் தற்போது, சிறந்த காலகட்டத் திரைப்படம் (period film), சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாசார நடனம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு மைக்கே ஜே.மேயர் இசையமைத்திருந்தார். சாய் பல்லவி அபாரமாக நடனம் ஆடியிருந்தார்.
திரைத்துறையில் சம்பாதிக்கும் பணத்தை வேறு தொழில்களிலும் முதலீடு செய்கிறார் நயன்தாரா. முதலில் ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து தொடங்கிய அவர், பின்னர் 'சாய் வாலே' எனும் தேநீர் தயாரிப்பு நிறுவனத்தில் ஐந்து கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளதாகத் தகவல்.
இதையடுத்து தனது தோழியின் உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக உள்ள அவர், தற்போது அதில் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளாராம்.
அண்மையில் இறைச்சி வகைகளை இணையம் வழி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகி உள்ளார் நயன்தாரா. இந்நிலையில், அடுத்தக்கட்டமாக எண்ணெய், எரிபொருள் தொழிலில் அவர் முதலீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளாராம்.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனியும் 'விருமாண்டி' பட நாயகி அபிராமியும் இணைந்து நடிக்கும் புதுப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இயக்குநர் மிஷ்கின் இப்படத்தில் வில்ல னாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசைப் பணி களுக்காக இளையராஜாவைச் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அது இப்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் இளையராஜா முன் லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் சிலர், இளையராஜாவிடம் நாற்காலிகள் வாங்கக்கூட காசு இல்லையா என்றும் அவர் பிறர்க்கு மதிப்பு அளிப்பதில்லை என்றும் விமர்சித்துள்ளனர்.இதையடுத்து லட்சுமியின் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.
"இளையராஜா கடவுளுக்கு நிகரானவர், அவர் காலடியில் அமர்ந்திருப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
"மேலும் தரையில் அமர்வது உடலுக்கு நல்லது. அதனைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்," என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

