ஒருசில படங்களின் வெற்றியை மட்டும் கவனத்தில் கொண்டு ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் போக்கு மாறிவிட்டதாகக் கூற முடியாது என்கிறார் மாதவன்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
"தென்னிந்தியாவில் உருவான சில படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றுள்ளன. 'பாகுபலி-1', 'பாகுபலி-2', 'ஆர்ஆர்ஆர்', 'புஷ்பா', 'கேஜிஎஃப்' ஆகிய படங்களுக்கு வடஇந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சொல்லப்போனால், இந்தியில் உள்ள முன்னணி நாயகர்களின் படங்களைவிட இவற்றின் வசூல் நன்றாக இருந்தது. ஆனால் இந்தச் சில படங்களின் வெற்றியை மட்டுமே வைத்து இந்திய சினிமாவின் பாணி மாறியுள்ளது என்று கூறிவிட முடியாது.
"நல்ல படங்களை மக்கள் நிச்சயம் விரும்பிப் பார்ப்பார்கள். உண்மையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் ஏராளமான உலக சினிமாக்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள்.
"அதனால் அவர்களின் விருப்பங்களிலும் ரசனைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று கருதுகிறேன்," என்றார் மாதவன்.

