'கடாவர்' படத்தில் தாம் ஏற்று நடித்த கதாபாத்திரம் தம்மை மேலும் வலிமையான பெண்ணாக மாற்றி இருக்கிறது என்கிறார் அமலா பால்.
அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியீடு கண்ட அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. எனினும் தமக்குக் குறைந்தபட்ச லாபம் கிடைத்துள்ளதாக நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார் அமலா.
இந்தப் படம் தமக்குப் பல்வேறு அனுபவங்களையும் நல்ல பாடங்களையும் தந்துள்ளதாக அண்மைய பேட்டியில் அவர் பதிவிட்டுள்ளார்.
"நான் தயாரிப்பாளராக மாறியதில் மகிழ்ச்சிதான் அதிகம் உள்ளது. இதுவரை சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்த நான், இப்போது சிலருக்குச் சம்பளம் தரும் அள வுக்கு உயர்ந்திருக்கிறேன்.
"நல்ல கதாசிரியர், சிறந்த இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் திறமையான நடிகர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்கும் அளவுக்கு எனக்குச் சக்தி வழங்கியுள்ள கடவுளுக்கு நன்றி," என்கிறார் அமலா.
எழுபது விழுக்காடு அளவுக்குப் படப்பிடிப்பை நடத்தி முடித்த நிலையில், மீதுமுள்ள படத்தை முடிக்க இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் தேவைப்பட்டதாம். அப்போது தன் மீது நம்பிக்கை வைத்து நிதியுதவி செய்தவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்கிறார்.
"இந்தப் படத்தில் நான் இறந்தவர்களின் சடலங்களைத் தோண்டி எடுத்து உடல் கூராய்வு நடத்துவதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு கட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது, நானும் ஒரு சடலத்தைப் போல் வலம் வருவதாகவே உணர்ந்தேன்.
"படத்தை முடிக்க முடியுமா என்கிற நம் பிக்கை போய், கிட்டத் தட்ட நடைப்பிணமா கவே மாறத் தொடங்கினேன். இடைப்பட்ட காலத்தில் இரண்டு ஆண்டுகளைக் கொரோனா எடுத்துக்கொண்டது. அந்தச் சமயத்தில் அனைத்து வகையிலும் சிரமப்பட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை திடீ ரெனக் காலமானது ஈடுசெய்ய முடியாத இழப்பு. அந்தத் துக்கத்தில் இருந்து நானும் அம்மாவும் எப்போது மீள்வோம் என்று தெரியவில்லை," என்கிறார் அமலா பால்.
சில தவிர்க்க இயலாத காரணங்களால் 'கடாவர்' படம் ஓடிடி தளத்தில் வெளியானதாகக் குறிப்பிடுபவர், தமக்கு பொருளியல் ரீதியில் நஷ்டத்தை ஏற்படுத்தாத திரைப்படத்தைத் தயாரித்து, நடித்ததில் மனநிறைவு இருப்பதாகக் கூறுகிறார்.
"படம் தயாரானதும் விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக்காட்டி கருத்து கேட்டபோது கலவையான விமர்சனங்கள் வந்தன. சிலர், இது ஓடிடிக்கு பொருத்தமான படம் என்றார்கள். இன்னும் சிலர், மிகக் குறைந்த விலைக்கு பட வெளியீட்டு உரிமையைக் கேட்டனர்.
"அந்த நேரம் பார்த்து என் நலனில் அக்கறை உள்ளவர்கள் குறிப்பிட்ட ஒரு ஓடிடி நிறுவனத்துடன் அறிமுகம் செய்து வைத்தனர். அதனால் நல்ல முறையில் படத்தின் வெளியீட்டு உரிமையை விற்று, எனக்கு இருந்த கடனை அடைத்து, கையைச் சுட்டுக்கொள்ளாமல் குறைந்தபட்ச லாபத்துக்கு விற்றேன்," என்கிறார் அமலா.
இனி பெண் மையக் கதைகளில் மட்டுமே நடிப்பீர்களா என்று சிலர் கேட்கிறார்களாம். அப்படியெல்லாம் எந்தவொரு திட்டமும் இல்லை என்பதே அமலாவின் பதில்.
"'மைனா' படத்தில் நடித்தபோது எனக்கு 18 வயது. போதிய அனுபவம் இல்லை. பிறகு, தவறுகளில் இருந்து பாடம் கற்றேன். எனக்கு நடிப்புத் திறமை இருக்கிறது என்று நான் உணர்ந்தபோது நல்ல கதாபாத்திரங்கள், சவாலான கதாபாத்திரங்கள் என இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தே 'ஆடை' படத்தை ஒப்புக்கொண்டேன்.
"அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறாமல் போயிருக்கலாம். ஆனால், 'அமலா பால் கலைக்காக, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக துணிந்திருக்கிறார்' என்று விமர்சகர்கள் எழுதினார்கள் அல்லவா, அதுதான் எனக்கான வெற்றி. அந்த துணிவுதான் பெண் மையக் கதைகள் என்னை நோக்கி வரக் காரணம். பெண் மையக் கதையாக இருந்தாலும் இதுவரை செய்யாத பாத்திரங்கள் என்றால் மட்டுமே ஏற்பேன்," என்கிறார் அமலா.

