ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைவதாகச் சொல்கிறார் அருண் விஜய்.
புதுப்படங்களை முறைகேடாக இணையத்தளங்களில் வெளியிடுவதால் திரையுலகம் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாக அண்மைய பேட்டியில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தொடர் கடந்த 19ஆம் தேதி வெளியானது. திரையுலகத்தினர் அனுபவிக்கும் வேதனைகளையும் சிக்கல்களையும் இந்தத் தொடர் ஆழமாகவும் புள்ளி விவரங்களுடனும் எடுத்துச் சொல்லும் வகையில் உருவாகி இருப்பதாகச் சொல்கிறார்.
"நான் நடித்த 'தடம்' படம் 2019இல் வெளியானது. ஆனால் அடுத்த நாளே இணையத்தளங்களில் அதை வெளியிட்டனர். இதுபோன்ற செயல்களால் தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்படும். இதை நன்கு அறிந்துள்ளவர்கள் இப்படிப்பட்ட முறைகேடான செயல்களில் ஈடுபடக்கூடாது," என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ள அருண் விஜய், ஓடிடி தளங்களில் திரைக் கலைஞர்களுக்கு கூடுதல் சுதந்திரம் கிடைத்துள்ளது என்கிறார்.
ஓடிடி தளங்களில் துணிச்சலுடன் செயல்பட முடிகிறது என்றும் எதுகுறித்தும் வெளிப்படையாகப் பேச முடிகிறது என்றும் சொல்கிறார்.
"நம்முடைய கருத்துகளை உரக்கச் சொல்லும் சுதந்திரம் வேண்டும். திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறேன்.
"எனக்கான கதாபாத்திரத்துடன் பொருத்திக்கொள்ளவும் அதனுடன் பயணம் செய்யவும் கூடுதல் அவகாசம் கிடைக்கிறது என்பதை வேண்டுமானால் முக்கியமான வித்தியாசம் எனக் குறிப்பிடலாம். அதேசமயம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படைப்புகள் மூலை முடுக்குகள் எல்லாம் சென்றடைகிறது. இதனால் கடைக்கோடி ரசிகனுக்கும் நம் படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்," என்கிறார் அருண் விஜய்.
'தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தொடரில் பேசப்பட்டுள்ள விஷயங்களை, இரண்டரை மணிநேர திரைப்படத்துக்குள் அடைக்க முடியாது என்றும் அதை உணர்ந்துதான் இணையத்தொடராக எடுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கிறார்.
முன்பு திருட்டு விசிடி, இப்போது முறைகேடாகச் செயல்படும் இணையத்தளங்கள் ஆகியவற்றால் திரைத்துறை தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்படுகிறது என கவலை தெரிவிக்கிறார்.
"தயாரிப்பாளர்களின் வலி, கலைஞர்களின் உழைப்பு ஆகியவற்றை மனதிற்கொண்டுதான் இணையத்தொடரில் நடித்தேன். என்னைப் பொறுத்தவரை 'இயக்குநரின் நடிகன்' என்று பெயரெடுக்கவே விரும்புகிறேன். காரணம், நான் நடிக்கும் கதாபாத்திரங்களை எனக்கும் முன்பாகவே உள்வாங்கிக் கொண்டு, அதை மெருகேற்றுவது இயக்குநர்தான். அவரது உழைப்பின் தொடர்ச்சியாகவே நடிகர்கள் திரையில் தோன்றுகிறார்கள்.
"நான் கதாநாயகனாக நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரமும் சில இடங்களில் தவறு செய்வதாக காட்டப்படுகிறது. சில தோல்விகளைச் சந்திப்பதாகவும் சித்தி ரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட காட்சிகளில் ஏன் நடிக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்பதுண்டு.
"இதுபோன்ற காட்சி அமைப்பை நான் வரவேற்கிறேன். காரணம், கதாநாயகர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் பின்னடைவுகள் ஏற்படும். அவ்வாறு காட்சிப்படுத்தும்போதுதான் இயல்பாகவும் நம்பும்படியாகவும் இருக்கும்.
"சிறு குறைபாடுகள் உள்ள கதாநாயகனாக திரையில் தோன்றுவதை விரும்புகிறேன்," என்று சொல்லும் அருண் விஜய், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக வருந்துகிறாராம்.
அந்த வாய்ப்பு தேடிவந்தபோது, தமது சொந்தத் தயாரிப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வந்ததாகவும் நீண்ட நாள்கள் மீசை, தாடியுடன் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் தரப்பில் கேட்டுக்கொண்டதாகவும் சொல்கிறார்.
"என்னால் நீண்ட நாள்களுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அதனால் அந்தப் பட வாய்ப்பு கைநழுவிப்போனது. எனினும் மணி சார் மீண்டும் ஒரு வாய்ப்பை அளிப்பார் என நம்புகிறேன்," என்கிறார் அருண் விஜய்.

