தன் பெயரை விருதுக்கு பரிந்துரைத்ததால் கோபம் அடைந்த நடிகை கங்கனா ரணவத், 'ஃபிலிம்ஃபேர்' நிறுவனத்தின்மீது வழக்கு தொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவரது இந்தக் கோபம் சமூக ஊடகங்களில் புதிய விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டிலேயே 'ஃபிலிம் ஃபேர்' விருதுக்கான தேர்வில் ஊழல் நிலவுவதாகவும் நியாயமற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் சாடியிருந்தார் கங்கனா.
மேலும் அந்த விருதுத் தேர்வில் ஊழலும் நெறிமுறையற்ற செயல்பாடுகளும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இனி தமது பெயரை அந்த விருதுக்குப் பரிசீலிக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் நடித்திருந்தார் கங்கனா.
இந்தப் படம் கடந்த 2021இல் வெளியானது. இதில் சிறப்பாக நடித்ததற்காக 67வது 'ஃபிலிம்ஃபேர்' விருதுக்கு சிறந்த நடிகைக்கான பிரிவில் கங்கனாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருது குழுவினர் அவருக்கு அண்மையில் தகவல் தெரிவித்தனர். அதன் பிறகே பிரச்சினை வெடித்திருக்கிறது.
"நியாயமற்ற முறையில் வழங்கப்படும் 'ஃபிலிம் ஃபேர்' உள்ளிட்ட விருதுகளை நான் தவிர்த்து வருகிறேன். இருப்பினும் என்னை தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறி அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் இன்னும் என்னைப் பரிந்துரைத்து வருவதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
"அந்த விருது நிகழ்வில் நான் பங்கேற்பது எனது தொழில் தர்மத்திற்கு எதிரானது," என்கிறார் கங்கனா.
இவரது இந்த பகிரங்க குற்றச்சாட்டை அடுத்து, விருதுப் பரிந்துரைப் பட்டியலில் இருந்து அவரது பெயரை 'ஃபிலிம் ஃபேர்' நீக்கிவிட்டது.

