திரையில் மட்டுமல்ல, பொது வெளியிலும் எதையும் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசக்கூடியவர் சந்தானம்.
கதாநாயகனாக மட்டுமே நடித்துக்கொண்டிருந்த அவர், மீண்டும் சில காலம் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில், அவரே இத்தகவலை உறுதி செய்வது போல் பேசியுள்ளார்.
ஆர்யாவும் சந்தானமும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த சங்கதி. இருவரும் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றால் அந்த இடம் கலகலப்பாக மாறிவிடும்.
அதேபோல் இவர்கள் இருவரும் திரையில் தோன்றும்போது நகைச்சுவை கூடுதலாக இருக்கும் என இயக்குநர்கள் துணிச்சலுடன் உத்தரவாதம் அளிக்கலாம்.
ஆர்யா தற்போது 'கேப்டன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் அறிமுக, விளம்பர நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நண்பர் ஆர்யாவின் படம் என்பதால் இந்த நிகழ்வில் சந்தானமும் பங்கேற்றார். ஆனால் ஆர்யா தன்னை எவ்வாறு அழைத்தார் என்று குறிப்பிட்டபோது அரங்கில் பலத்த சிரிப்பொலி.
"திடீரென்று அவர் (ஆர்யா) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். 'கேப்டன்' படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தபோது சரி என்று சொன்னேன்.
"இப்போது என்ன செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என்றேன். உடனே, சரி.. இங்கேயும் வந்து சும்மா இரு என்று சொல்லி நிகழ்ச்சிக்கு அழைத்தார்," என்றார் சந்தானம்.
தாம் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கத் தயார் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்தார்.
சந்தானமும் ஆர்யாவும் இணைந்து நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' நகைச்சுவைக்காக பெரிதும் பேசப்பட்ட படம். ஏராளமான இளையர்கள் இந்தப் படத்தைப் பார்த்து இவர்கள் இருவருக்கும் ரசிகர்களாக மாறிவிட்டனர்.
"இந்நிலையில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால், அதில் ஆர்யாதான் கதாநாயகன் என்றால், தாம் மீண்டும் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கத் தயார்," என்றார் சந்தானம்.
இதற்கிடையே, முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று மேற்குறிப்பிட்ட இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்.

