"இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தமான படம் என்று அண்மைக்காலமாக விளம்பரப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது விளம்பரத்துக்கான உத்தி என்றே கருதுகிறேன்," என்கிறார் விஷால்.
ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் உள்ளடக்கம்தான் காரணமாக இருக்கும் என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதைத்தளம், நடிகர்கள் தேர்வு, இசை, திரைக்கதை ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று குறிப்பிடுபவர், தற்போது 'லத்தி', 'மார்க் ஆன்டனி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
"கடந்த சில ஆண்டுகளாக நான் நடித்து வரும் படங்கள் பல இந்தியில் தொடர்ந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகின்றன. தமிழ்நாட்டுக்கு வெளியிலும் எனது படங்கள் திரையிடப்படுவதால் நானும் நாடறிந்த நடிகராக மாறி உள்ளதாக கருதுகிறேன்.
"பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் வடஇந்தியாவுக்கோ அல்லது இமயமலைக்கோ சென்றிருந்தால் என்னை யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் சென்னையில் எந்த அளவுக்கு நான் பிரபலமாக உள்ளேனோ, அதே போன்றுதான் மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பெரிய நகரங்களிலும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர்.
"இந்திப் படங்களை நமது தமிழ்ப் படங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் போன்று இவ்விஷயத்தை சில தரப்பினர் பெரிதுபடுத்துகிறார்கள்.
"தென்னிந்திய படைப்புகளான 'பாகுபலி', 'கேஜிஎஃப்' போன்ற படங்கள் வடஇந்தியாவிலும் வெற்றி பெற்றன என்றால், அவற்றின் தரமான உள்ளடக்கம்தான் காரணம். இதைப் புரிந்து கொண்டால் வெற்றி பெறலாம்," என்கிறார் விஷால்.

