விஜய் நடிப்பில் உருவாகும் 'வாரிசு' படத்தில் நடிக்க வருமாறு அழைத்து தன்னை அவமானப்படுத்திவிட்டதாகப் புகார் எழுப்பி உள்ளார் தொலைக்காட்சித் தொடர் நடிகர் ரவிச்சந்திரன்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தின் தந்தையாக நடிக்கும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன. அந்த வகையில் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 'வாரிசு' படத்தில் நடிக்க வேண்டும் என்று இவரை அணுகியுள்ளனர். இணை இயக்குநர் நேரில் வருமாறு கூறியதன் பேரில் இயக்குநரின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார் ரவிச்சந்திரன்.
அங்கு ஒப்பனை சோதனை நடைபெற்று, அதிலும் எந்தச் சிக்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மறுநாள் படப்பிடிப்புக்கு வருமாறு கூறியதன் பேரில் அங்கு சென்ற தமக்கு மோசமான அனுபவம் காத்திருந்த தாகச் சொல்கிறார் ரவிச்சந்திரன்.
"விஜய் படத்தில் நடிப்பது பெரிய வாய்ப்பு என்பதால் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் இயக்குநரிடம் விவரம் தெரிவித்தேன். அவரும் எனக்கு அனுமதி அளித்து அனுப்பி வைத்தார்.
"மறுநாள் 'வாரிசு' படப்பிடிப்புக்குச் சென்றபோது எனக்கான உடைகளை அணிந்து, கேரவேனில் இருந்த இயக்குநரைச் சந்தித்தேன். அவர் அங்கிருந்த இருக்கையில் அமரச் சொன்னார்.
"பிறகு அவர் இறங்கிச் செல்ல, திடீரென பட மேலாளர் ஒருவர் வந்து, இயக்குநர் என்னை கிளம்பச் சொன்னதாக தகவல் தெரிவித்தார். எனக்கு கடும் அதிர்ச்சி.
"என்ன காரணம் என்று கேட்டபோது, 'உங்களது தோற்றத்தை பார்க்கும்போது வசதி படைத்தவராகத் தோன்றுகிறது. ஆனால் இப்படத்தின் கதைப்படி, பாவமான தோற்றம் உள்ளவர்தான் வேண்டும். அதற்கு நீங்கள் பொருத்தமாக இருக்கமாட்டீர்கள். அதனால் கிளம்பச் சொல்லிவிட்டார்' என்று பதில் கிடைத்தது.
"அதைக் கேட்டதும் அவமானமாகிவிட்டது. பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தபோது சொந்த ஊரில் இருந்து பேருந்தில் சென்னை வருவதற்குக்கூட என் னிடம் காசு இல்லை. கடன்வாங்கி சென்னை வந்து எப்படியோ திரைப்பட நடிகனாக மாறியுள்ளேன்.
"இப்போது ஓரளவு சம்பாதிக்கிறேன். ஆனால் இந்த மோசமான அனுபவம் மனதைக் காயப்படுத்திவிட்டது. ஆனால் இந்த விஷயம் எல்லாம் நடிகர் விஜய்க்கு தெரியாது என நினைக்கிறேன். அவ ருக்கு தகவல் போயிருந்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டி ருக்காது," என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் ரவிச்சந்திரன்.
, :

