கதாநாயகிகளுக்கு கவர்ச்சி என்பதும் ஓர் அடையாளம்தான் என்கிறார் ஷ்ரத்தா தாஸ்.
தமிழ்ப் படங்களில் நடிக்காவிட்டாலும், தமக்கு தமிழிலும் தெலுங்கிலும் நிறைய ரசிகர்கள் இருப்பதாகச் சொல்கிறார் கவர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஷ்ரத்தா.
இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். எனினும் தெலுங்குப் பட வாய்ப்புதான் முதலில் தேடிவந்ததாம். தொடக்கத்திலேயே கவர்ச்சியில் தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடித்ததால், இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் எனப் பல இந்திய மொழிகளில் வாய்ப்புகள் தேடி வந்தன.
ஷ்ரத்தா எப்போது கோடம்பாக்கத்துக்கு வருகை தருவார் என தமிழ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், 'அர்த்தம்' திரைப்படம் அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைத்துள்ளது. இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் ஜோடியாக நாயகி வேடத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா.
அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு படுகவர்ச்சியாக உடையணிந்து வருகை தந்து அசத்தினார்.
ஷ்ரத்தாவைப் பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் ஒரு பக்கம் குவிந்திருக்க, புகைப்படக் கலைஞர்களும் அவரை மொய்த்துக்கொண்டு படம்பிடித்தனர். இதனால் அந்த நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
"இதற்காக படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டேன் என்றாலும் தமிழ் ரசிகர்களும் ஊடகத்துறையினரும் என் மீது பொழிந்த அந்த அன்பு என்னை நெகிழ வைத்தது. தமிழில் எனது நடிப்பில் இன்னும் ஒரு படம்கூட வெளியாகவில்லை. அதற்குள் என்னை வரவேற்கும் ஆர்வத்தில் ஒரு கூட்டம் கூடியிருந்தது எனக்கு வியப்பு அளித்தது," என்கிறார் ஷ்ரத்தா.
தெலுங்குத் திரையுலகில் முதலிடத்தைப் பிடிப்பதில் பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அந்தப் போட்டியில் எல்லாம் தமக்கு ஆர்வம் இல்லை என்கிறார் ஷ்ரத்தா.
நன்றாக நடிக்க வேண்டும், நல்ல நடிகை என்று பெயரெடுக்க வேண்டும், வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் இவரது கொள்கையாம்.
"இதுவரை நடித்துள்ள படங்களின் மூலம் எனக்கென்று நிரந்தமான தெலுங்கு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டேன். அவர்களுடைய மனதில் எனக்கு இடம் கொடுத்திருப்பதால், மற்ற எண் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை.
"கடந்த 2010ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் தெலுங்கில் 'நாகவல்லி'யாக மறுபதிப்பானது 'சந்திரமுகி' படம். அதில் கீதா என்கிற முக்கியமான பாத்திரத்தில் நடித்தேன். அப்போது தொடங்கி இப்போது 'அர்த்தம்' படம் வரை 14 ஆண்டுகளில் நான் நடித்துள்ள 60 படங்களில், 35 படங்கள் தெலுங்குப் படங்கள்தான். அங்கே நடிப்பு, கவர்ச்சி இரண்டையுமே ரசிப்பார்கள். ஆபாசமாக நடித்தால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
"தெலுங்கு சினிமாவில் என்றில்லை, இந்தியாவில் எந்த மொழி சினிமாவிலும் இதுதான் யதார்த்தம். தேவையற்ற, திணிக்கப்படும் கவர்ச்சியை இந்திய சினிமா ரசிகர்கள் அறவே விரும்புவதில்லை. அதேசமயம் ஒரு நடிகை என்ற வகையில் கவர்ச்சியையும் எனக்கான ஓர் அடையாளமாகவே பார்க்கிறேன். அளவுக்கு மீறிய எதுவும் நல்லதல்ல," என்கிறார் ஷ்ரத்தா தாஸ்.
சினிமாவில் சம்பாதிப்பதை தமது கொள்கையாகக் கொண்டிருந்தாலும், தமக்கு பணப் பிரச்சினை ஏதும் இல்லை என்று குறிப்பிடுபவர், தமது தந்தை தொழிலதிபர் என்பதால் குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றி உள்ளதாகக் கூறுகிறார்.
"பணத்துக்கோ வசதிக்கோ எந்தக் குறையும் இல்லை. எனக்கென்று ஓர் அடையாளம் வேண்டுமல்லவா? அதற்காக பியூஷ் மிஷ்ரா, சித்ரஞ்சன், சலீம் ஷா போன்ற புகழ்பெற்ற நாடக இயக்குநர்கள் நடத்திய பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு மேடை நாடக நடிப்பை கற்றுக்கொண்டு சினிமாவில் நடிக்க வந்தேன்," என்கிறார் ஷ்ரத்தா.

