திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read

 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. திஷா பதானி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆனந்தராஜ், கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி உள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர்கள் பலர் இணைந்திருப்பதால், இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

 விஜய் நடித்த 'பத்ரி', சூர்யா நடித்த 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பூமிகா, சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டு திரையுலகில் இருந்து விலகினார். நீண்ட இடை வெளிக்குப் பிறகு சில குணச்சித்திர வேடங்களில் மட்டும் தலைகாட்டி வந்த அவர், இப்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படத்தில் ஜெயம் ரவியின் சகோதரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

 கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு தன் உடல் எடையைக் குறைத்து, மெலிந்து காணப்படுகிறார் அஞ்சலி. இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்து இணையத்தளம் ஒன்றில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. பதினைந்து ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்க, அவரிடம் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மட்டுமே உள்ளதாக அந்த இணையத்தள செய்தி தெரிவிக்கிறது. ஒரு படத்தில் நடிக்க குறைந்தபட்சம் ஐம்பது லட்சம் சம்பளம் பெறும் அவரிடம் இவ்வளவு சொத்துகள்தான் உள்ளனவா என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனினும், அஞ்சலி இதுகுறித்து ஏதும் கூறவில்லை.

 மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பிசாசு 2'. கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய்ப்படம் 'பிசாசு.' அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்தப் படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். பூர்ணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 'நெஞ்சை கேளு' எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் அண்மையில் வெளியானது. இந்நிலையில், 'பிசாசு 2' படத்தைத் தணிக்கைக் குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.