இந்த ஆண்டில் மட்டும் நித்யா மேனன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியீடு கண்டுள்ளன. மூன்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நித்யா மேனன்.
தனுஷுடன் நடித்து அண்மையில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுடன் நித்யா நெருக்கமாகிவிட்டார். அப்படத்தில் அவர் ஏற்று நடித்த யசோதா கதாபாத்திரம் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
அதேசமயம் அப்படத்தின் இறுதிக்காட்சி எதிர்பார்த்தபடி இல்லை என்றும் பொருத்தமற்ற முடிவு என்றும் ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஓர் இயக்குநரின் பணியில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று கூறியுள்ளார் நித்யா மேனன்.
"எதிலும் ஒருமித்த கருத்து என்பது ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவும். இது இப்படி இருக்க வேண்டும் என்றும் இப்படி இருந்திருக்கலாம் என்றும் பலர் பலவிதமாகப் பேசக்கூடும்.
"ஒரு திரைப்படத்தை உருவாக்கும் இயக்குநர்தான் அனைத்தையும் முடிவு செய்கிறார். படத்தில் இடம்பெறும் காட்சிகள், அவற்றின் தன்மை எல்லாம் அவர் கையில் உள்ளது.
"இறுதிக்காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அவர் தன் கருத்தை காட்சிப்படுத்துகிறார்.
"ஒருவேளை நீங்கள் திரைப்படம் இயக்கும் பட்சத்தில் உங்களுடைய கருத்துகளை முன்வைக்கலாம். 'திருச்சிற்றம்பலம்' படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலானோர் படத்தை ரசித்துப் பார்த்துள்ளனர்.
"எனவே எதிர்மறை கருத்துகள் குறித்துப் பேசுவதை நிறுத்த வேண்டும்," என்று திட்டவட்டமாகப் பேசுகிறார் நித்யா.
ஒரு கதாபாத்திரத்துக்காக தாம் நூறு விழுக்காட்டுக்கும் மேல் உழைப்பதாகக் குறிப்பிடுபவர், அதற்கான அங்கீகாரமும் பாராட்டும் உடனுக்குடன் கிடைப்பது கூடுதல் உற்சாகம் தருகிறது என்கிறார்.
"உண்மைச் சம்பவங்கள், யதார்த்தமான, நேர்மையான கதைக்கருக்களை கவனத்துடன் தேர்வு செய்கிறாராம். மேலும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் எனும் திட்டமும் இல்லை என்கிறார்.
"எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும், அது எனது இயல்பான குணாதிசயத்துடன் ஏதோ ஒரு வகையில் பொருந்திப்போனால் போதும், அதில் நடிக்கத் தயங்கமாட்டேன். துணிச்சலான பெண்ணை திரையில் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். எனக்குப் பல மொழிகள் தெரியும். அதனால் வசதியாக உள்ளது.
"சினிமா என்பது ராக்கெட் அறிவியல் சம்பந்தப்பட்டதல்ல. எனவே எது சரியானது என்று தோன்றுகிறதோ, அதைச் செய்கிறேன்.
"எனவே திட்டமிட்டுச் செயல்பட்டு, வாய்ப்புகளை ஏற்க வேண்டும் என்பதெல்லாம் அவசியம் இல்லாதது," என்று நித்யாவின் பேச்சில் தெளிவும் நம்பிக்கையும் அதிகம் தொனிக்கிறது.
நித்யாவின் நிஜம், நிழல் (நடிகை) ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம்?
"இரண்டும் வெவ்வேறு என நான் கருதியது இல்லை. நடிப்பு என்பது வெளியில் இருந்து வரவில்லை. அது ஆத்மார்த்தமாக, என்னுள் இருந்து இயல்பாகவும் சரளமாகவும் வெளிப்படுகிறது.
"என் ஆழ் மனதில் பதிந்துள்ளவற்றை எனது நடிப்பில் காண முடியும். அதேசமயம் படப்பிடிப்பு முடிந்த அடுத்த நிமிடமே என் மனதைவிட்டு அந்தந்த கதாபாத்திரங்கள் மறைந்துவிடும்," என்கிறார் நித்யா மேனன்.
'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நித்யாவை, 'இவர் ஒரு நடிப்பு ராட்சசி' என்று குறிப்பிட்டுப் பாராட்டினார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவரைப் போன்ற அனுபவமும் அதீத திறமையும் கொண்டவர்கள் தம்மைப் பாராட்டுவது மிகப்பெரிய அங்கீகாரம் என்கிறார்.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ள மற்ற இரு கதாநாயகிகளான பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோரும் நித்யாவின் நடிப்பைப் பாராட்டித் தீர்த்துள்ளனர்.
"உடன் நடிக்கும் கலைஞர்களும் பாராட்டுவதைக் கேட்கும்போது ஒரு நடிகையாக வியந்துபோகிறேன். பிரியாவும் ராஷியும் எனது ரசிகைகள் என்று கூறியபோது, இதுதான் எனக்குக் கிடைத்த உச்சபட்ச பாராட்டு என்று நினைக்கத் தோன்றியது," என்கிறார் நித்யா.
, :

