வெற்றி: எல்லாவற்றையும்விட கதை முக்கியம்

வெற்றி: எல்லாவற்றையும்விட கதை முக்கியம்

2 mins read
892ae18d-a86e-4ec1-9a20-824982ccd5b4
'ஜீவி' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

வெற்றி இது­வரை இரண்டு படங்­களில் மட்டுமே நடித்­துள்­ளார். எனினும் கதைத் தேர்­வில் கெட்டிக்­கா­ரர் என்று பெயர் பெற்றுள்ளார். கார­ணம், அவர் அடுத்து நடிக்­கும் பட­மும் வித்­தி­யா­ச­மான கதை­யம்­சத்­து­டன் உரு­வா­கிறது.

'8 தோட்­டாக்­கள்', 'ஜீவி' என வெற்றி நடித்­துள்ள இரு படங்­களுமே விமர்­சன ரீதி­யில் வர­வேற்பு பெற்­றவை. அண்­மைய பேட்டி ஒன்­றில், தமது திரை­யு­லக அனு­ப­வங் களைப் பகிர்ந்துகொண்­டுள்­ளார்.

வெற்­றி­யின் சொந்த ஊர் திரு­நெல்­வேலி. எனி­னும் படித்­தது, வளர்ந்­தது எல்­லாம் சென்­னை­யில் தானாம். பொறி­யி­யல் பட்­ட­தாரி.

பிறகு லண்­டன் சென்று மேற்படிப்பை மேற்­கொண்­ட­வர், தனது குடும்­பத்­துக்குச் சொந்­த­மான கட்­டு­மான நிறு­வ­னத்­தைக் கவ­னித்­துக்கொள்­ளும் பொறுப்பை ஏற்க இருந்­தாராம்.

ஆனால் வெற்றி படிப்பை முடித்து நாடு திரும்­பிய வேளையில் கட்­டு­மா­னத்­துறை தொய்­வ­டைந்து போன­தால் சினிமா பக்­கம் பார்வை­யைத் திருப்பி உள்­ளார்.

"கட்­டு­மா­னத்­து­றை­யில் சாதிக்க வேண்­டும் என்ற வேட்­கை­யு­டன் சில திட்­டங்­கள் வைத்­தி­ருந்­தேன். ஆனால் எதை­யும் செயல்­ப­டுத்த முடி­யாத நிலை. சிறு வய­தில் இருந்தே சினிமா மீதான ஆசை அதி­கம். அத­னால் என் நண்­பர் ஒரு­வர் மூலம் கூத்­துப்­பட்­ட­றை­யில் நடிப்­புப்பயிற்சி பெற்­றேன்.

"இது­தான் எனது சினிமா பயணத்­தின் தொடக்­கப்புள்ளி," என்று சொல்­லும் வெற்றி, தனது முதல் படத்தை தாமே தயா­ரித்­தார். ஸ்ரீ கணேஷ் இயக்­கத்­தில் உரு­வான '8 தோட்­டாக்­கள்' படம் பெரிய அள­வில் பேசப்­பட்­டது.

"கதைதான் மற்ற அனைத்தையும் விட முக்கியம். அந்­தப் படத்­தின் வெற்­றிக்­குப் பிறகு பல விஷ­யங்கள் மாறி­விட்­டன.

"இயக்­கு­நர் ஸ்ரீகணேஷ் 'கருவி' என்ற கதையைத்தான் முத­லில் என்னிடம் சொன்­னார். அதைப் பட­மாக்­கு­வ­தற்­கான வேலை­க­ளை­யும் தொடங்­கிவிட்­டோம். அப்­போது­தான் திடீ­ரென '8 தோட்­டாக்­கள்' கதை­யை என்­னி­டம் விவ­ரித்­தார்.

"எனக்­கும் கதை பிடித்­தி­ருந்தது. அதில் உதவி ஆய்­வா­ளர் வேடத்­தில் நடிக்­கச் சொன்­ன­போது நான் தயங்­கவே இல்லை. காவல்­துறை அதி­கா­ரி­யாக நான் நடித்­ததை ரசிகர்­கள் ஏற்­றுக்கொண்­ட­னர்," என்­கி­றார் வெற்றி.

அதன்பிறகு காவல்­துறை அதி­காரி வேடம் என்று சொல்லி பல வாய்ப்­பு­கள் தேடி வந்­த­ன­வாம். ஆனால் வெற்றி எதை­யும் ஏற்­க­வில்லை. அடுத்து 'ஜீவி' படத்­தின் இரண்­டாம் பாகம், 'பிக்­பாஸ்' ஷிவா­னி­யு­டன் இணைந்து 'பம்­பர்' என்ற படம், 'தீங்­கிரை', 'மெமரீஸ்', 'ரெட் சாண்­டல்', 'உல்ஃப்' ஆகிய படங்­களில் நடித்­துக்கொண்­டி­ருக்­கும் வெற்றி, 'பஞ்­ச­தந்­தி­ரம்', 'பம்மல் கே.சம்­பந்­தம்' போன்ற ஜாலி­யான படங்­களில் நடிக்க விரும்­பு­கி­றா­ராம்.