'பிக்பாஸ்' நிகழ்ச்சி இந்திப் பதிப்பை தொகுத்து வழங்க, நடிகர் சல்மான் கான் ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருப்பதாக வெளியான தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த 15 ஆண்டுகளாக அவர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், 'பிக்பாஸ் சீசன் 16'ல் பங்கேற்க அவர் இவ்வளவு பெரிய தொகையைக் கேட்டதால் தயாரிப்புத் தரப்பு அதிர்ந்து போனது. கடந்த சீசனுக்கு சல்மான் பெற்ற தொகை ரூ.350 கோடிதான். இம்முறை சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளார். இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தயாரிப்புத் தரப்பு சல்மான் கேட்ட தொகையைத் தர முன்வந்துள்ளதாம். ஆனால் அவர் இன்னும் தன் முடிவைச் சொல்லவில்லை.
இது கதாநாயகிகள் சம்பளத்தை உயர்த்தும் காலகட்டம்போல் இருக்கிறது. நயன்தாரா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ் என்று பலரும் சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அதிர்ச்சி அளித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் சமந்தாவும் இணைந்துள்ளார். 'புஷ்பா' படத்தின் வெற்றி, இந்திப் படங்களில் நடிப்பது உள்ளிட்ட காரணங்களால் அவர் ஊதியத்தை அதிகரித்துள்ளதாகத் தகவல். முன்பு 2.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த அவர், இப்போது 3.5 கோடி ரூபாய் கேட்பதாகத் தகவல். இந்தியில் நடிக்க வசதியாக தென்னிந்திய மொழிகளில் புதிதாக எந்தப் படத்தையும் சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை.
தமது 12வது திருமண நாளைக் கொண்டாடி உள்ளார் சிவகார்த்திகேயன். இதுகுறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன் மனைவி ஆர்த்தியுடன் சிரித்தபடி காணப்படும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார் சிவா. இந்நிலையில் திருமண நாளையொட்டி அவருக்கு நண்பர்களும் திரை உலகத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர். சிவகார்த்திகேயன்- ஆர்த்தி தம்பதிக்கு, ஆராதனா என்ற மகளும் குகன் தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷும் இப்போது கவர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதுவரை குடும்பப் பாங்கான வேடங்களில் கவனம் செலுத்தி வந்தவர், அண்மையில் கவர்ச்சியாக உடையணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனால் இணையவாசிகள் கீர்த்தியைப் பற்றி அதிகம் பேசிவந்தனர்.
இந்நிலையில், அவரது முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது.
மூன்று புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் கீர்த்தி. அதில் ஒரு படத்தை சுதா கொங்கரா இயக்குவதாகத் தகவல்.
மேலும், 'கேஜிஎஃப் - 2' படத்தைத் தயாரித்த 'ஹொம்பலி' நிறுவனம் தனது அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, விஜய்யின் அடுத்த படத்தில் கீர்த்திதான் நாயகி என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் சசிகுமார்.

