தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் மும்பையில் இருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. திண்டுக்கல் அருகே உள்ள கன்னியாபுரம் என்ற குக்கிராமத்தில் இருந்தும் வரலாம் என்று சொல்வதற்காகவே நடிக்க வந்துள்ளேன் என்கிறார் இளம் நாயகி துஷாரா விஜயன்.
'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். சிறு வயதிலேயே கதாநாயகியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்ததாகச் சொல்லும் துஷாரா, திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தம் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததால், திரையுலகம் மீதான விருப்பம் மேலும் அதிகரித்தது என்கிறார்.
"நான் யாரைப் பின்பற்றி திரையுலகுக்கு வந்தேன் என்று கேட்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரைப் பார்த்து நான் நடிகையாக ஆசைப்படவில்லை. சினிமா ஏற்படுத்தும் தாக்கம் வியக்க வைத்தது. திரையில் நாயகனும் நாயகியும் பேசும் வசனங்களை மனப்பாடம் செய்து, நமது சொந்த வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம்.
"திரைப்படங்களுடனும் கலைஞர்களுடனும் நம்மைப் பொருத்திப் பார்க்கிறோம். இதனால்தான் நாயகன், நாயகிக்கு அதிக வரவேற்பு கிடைப்பதாகத் தோன்றுகிறது," என்று சொல்லும் துஷாரா அச்சு அசல் தமிழ்ப் பெண்.
மிகச் சரளமாக தமிழில் உரையாடுபவர், மண்வாசனையுள்ள கதைக்களங்களில் நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார். மேலும், தமது வாழ்க்கையை 'சார்பட்டா' படத்துக்குமுன், சார்பட்டா'வுக்குப்பின் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்.
"உண்மைதான். முன்பு பத்துப் பேருக்கு என்னைப் பற்றித் தெரியும் என்றால், இப்போது எல்லோருக்கும் தெரிந்த முகமாகி உள்ளேன். அதுதான் சினிமா. இதற்கு ஆசைப்பட்டுத்தான் திரைத்துறைக்கு வந்துள்ளேன்.
"என் வீட்டில் உள்ள சிறார்கள்கூட நான் ஏற்று நடித்த மாரியம்மா கதாபாத்திரம் குறித்து பேசுகிறார்கள். நமக்குப் பிடித்தமானவற்றைச் செய்வதும் அவற்றை மற்றவர்கள் ரசித்துப் பாராட்டுவதும் அழகான அனுபவங்களாக மனத்தில் பதிந்துவிடுகின்றன. இது ஒருவித போதை. திரையுலகில் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாகிவிட்டது," என்று சிரித்தபடி கண்சிமிட்டுகிறார் துஷாரா.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் வாரிசு நடிகர்களுக்குத்தான் மவுசு உள்ளது என்றும் கூறப்படுவதை தம்மால் ஏற்க முடியாது என்று குறிப்பிடுபவர், யாராக இருந்தாலும் திறமைக்குத்தான் முதல் மரியாதை என்கிறார்.
"திறமை இல்லை என்றால் திரையுலகில் நீடிக்க இயலாது. நாம் சினிமாவை மதித்தால் அது நூறு மடங்கு திருப்பிச் செய்யும். மாடலிங், விளம்பரங்களில் நடிக்க அழகு என்பது மிக அவசியம். ஆனால், திரைப்படங்களில் நடிக்க அழகு தேவையில்லை.
"நமது திறமைக்கான அங்கீகாரத்தை யாராலும் நிராகரிக்க முடியாது. பெரிய அளவில் இல்லையென்றாலும் சிறிய அளவிலாவது அந்த அங்கீகாரத்தை எதிர்பார்க்கலாம்.
"திரைத்துறையில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம், பொறுமை காப்பது. எத்தனை பேர் வேண்டுமானாலும் உங்களைப் புறக்கணிக்கலாம். நிறைய அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
"இப்படித்தான் நான் போராடி வெற்றி பெற்றேன். கடுமையாக முயற்சி செய்தும் எதுவும் கிடைக்கவில்லையே என்று நான் புலம்பியதோ யோசித்ததோ கிடையாது," என்கிறார் துஷாரா.
சில படங்களில் ஒப்பந்தமாகி, படப்பிடிப்புக்கு முன்பு நீக்கப்பட்ட அனுபவம் தமக்கும் உள்ளது என்று குறிப்பிடுபவர், இதுபோன்ற மேலும் பல அனுபவங்களைக் கடந்துதான் இன்று நாயகியாக உயர்ந்திருப்பதாகச் சொல்கிறார்.
"சில புறக்கணிப்புகளும் மறுப்புகளும்தான் எனக்கு முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தின.
"நாயகிக்கு முக்கியத் துவம் உள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. பா.ரஞ்சித் போன்ற பெரிய இயக்குநரிடம் இருந்து இவ்வளவு விரைவாக இரண்டாவது படவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.
"அவர் திடீரென என்னை அழைத்து கதை சொன்னபோது நம்பவே முடியவில்லை. அதிலும், இந்தப் படம் நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைக்களத்துடன் உருவாகி உள்ளது.
"நான் நடிக்கும் படங்களின் சுவரொட்டியில் என் படமும் இடம்பெற வேண்டும் என்று மிகுந்த ஆசை. அதை நிறைவேற்றி உள்ளார் பா.ரஞ்சித்," என்கிறார் துஷாரா விஜயன்.

