'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்த பிறகு விஜய் சேதுபதிக்கு
அதேபோன்ற வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் 'ஜவான்' படத்தி லும் இவர் வில்லனாகி உள்ளார். இதற்காக இவர் பெற்ற சம்பளம் ரூ.21 கோடி என்பதுதான் கோடம்பாக்கத்தினர் வியக்கும் தகவல். தமிழ்ப் படங்களில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி பத்து முதல் பதினைந்து கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார். இந்தியில் வில்லனாக நடிக்க தன் சம்பளத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி உள்ளார்.
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நிதின் சத்யா மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். அப்படத்திற்கு
'கொடுவா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சுரேஷ் சாத்தையா இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் 'ஆடுகளம்' நரேன், முருகதாஸ், சந்தானபாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமன்னா நடித்துள்ள 'பப்ளி பவுன்சர்' அடுத்த மாதம் 23ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், முதன் முறையாக நேரடி மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் படம் என்பதால், கதையைக் கேட்ட உடனேயே நடிக்கச் சம்மதித்தாராம்.
அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கு 'சைரன்' எனத் தலைப்பு வைக்கப் பட்டுள்ளது. இதில் அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் சுவரொட்டி வெளியாகி உள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை கௌரவிக்கும் விதமாக கனடா நாட்டின் மார்க்கம் நகரில் உள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்டி உள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரகுமான். அதில், இதுபோன்ற கௌரவத்தை தமது வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்க்க வில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஏ.ஆர்.ரகுமான் என்றால் இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது கடவுளின் குணம். நம் அனைவரிடமும் அது உள்ளது. யாராக இருந் தாலும் இரக்கமுள்ளவரின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும்.
"ஒருவேளை நான் சோர்வு அடைந்தாலும், நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிக மான மக்கள் உள்ளனர், இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வேன்,'' என்று ரகுமான் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கு தொடர்பில் நடிகை மீரா மிதுனை காவல்துறை தேடி வருகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார்.

