தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டு களுக்கு மொத்தமாக விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் திரையுலகத்தினர் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், மீண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் தமிழ்த் திரையுலகத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 'பசங்க', 'மைனா', 'வாகை சூடவா', 'வழக்கு எண். 18/9', 'நீதானே என் பொன்வசந்தம்', 'குற்றம் கடிதல்' ஆகியவை சிறந்த திரைப்படங்களாக தேர்வு பெற்றுள்ளன.
சிறந்த நடிகர் விருதுக்கு கரன், விக்ரம், விமல், ஜீவா, ஆர்யா, சித்தார்த் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். பத்மபிரியா, அமலா பால், இனியா, லட்சுமி மேனன், நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற உள்ளனர்.
வசந்தபாலன் ('அங்காடித் தெரு'), பிரபுசாலமன் ('மைனா'), ஏ.எல்.விஜய் ('தெய்வத்திரு மகள்'), பாலாஜி சக்திவேல் ('வழக்கு எண். 18/9'), ராம் ('தங்க மீன்கள்'), ராகவன் ('மஞ்சப்பை') சிறந்த இயக்குநர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
இதேபோல் சிறந்த ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.