'கோப்ரா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைத் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார் மீனாட்சி கோவிந்தராஜன். தமிழில் இவர் அறிமுகமான படம் 'கென்னடி கிளப்'. அதன் பின்னர் 'வேலன்', 'வீரபாண்டியபுரம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், விக்ரமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையும் என கனவிலும் தாம் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
"இயக்குநர் அஜய் ஞானமுத்து திடீரென ஒருநாள் தொடர்புகொண்டு என்னைத் தேர்வு செய்திருப்பதாகச் சொன்னார். இன்ப அதிர்ச்சியாக இருந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை.
"என்ன சொல்றீங்க? நான் 'சியான்' விக்ரம் சார் படத்திலே இருக்கிறேனா... ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்தில் நானா... இசைஅமைக்கும்போது என் முகத்தையும் பார்ப்பார் அல்லவா... அதன் பிறகு அவரைச் சந்தித்தால் என்னை அடையாளம் கண்டுகொள்வார் அல்லவா.. என்று இடைவிடாமல் எனக்கு நானே பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன்.
"என்னுடைய முதல் படத்திலேயே இயக்குநர்கள் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது விக்ரமுடன் நடித்துள்ளேன். நான் அதிர்ஷ்டசாலி," என்று பூரித்துப்போகிறார் மீனாட்சி.
இவரது சொந்த ஊர் சென்னை. தந்தை கே.எஸ்.கோவிந்தராஜன் அரசியல் பிரமுகர். தாயார் ஸ்ரீஜா குடும்பத் தலைவி.
"அப்பாவும் பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்கள். சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா மீதான ஆர்வம் அதிகம். அதனால் பாரதிராஜப்பா (இப்படித்தான் அழைப்பேன்) வீட்டுக்கு வரும்போதெல்லாம் திரைப்படங்களில் நடிக்க ஆசை என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அவரும், சரியான நேரம் வரும்வரை காத்திருப்போம் என்பார்.
"வாய்ப்புக்காக காத்திருந்த வேளையில் முறைப்படி பரதநாட்டியம் பயின்றேன். மேலும் பட்டப்படிப்பையும் முடித்தேன். பிறகு தொலைக்காட்சிகளில் பங்கேற்ற பிறகுதான் 'கென்னடி கிளப்' பட வாய்ப்பு கிடைத்தது," என்கிறார் மீனாட்சி.
அறிமுகப் படம் வெளியாவதற்காகக் காத்திருந்த போதுதான் 'கோப்ரா' படத்துக்கு புதுமுகத்தை தேடி வரும் தகவல் கிடைத்ததாம். உடனே நடிப்புத் தேர்வில் பங்கேற்றுள்ளார். மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் முடிவில் மீனாட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
"இது நினைத்துக்கூட பார்க்காத வாய்ப்பு. பெரும் பொருள்செலவில் உருவான படம். என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த இயக்குநர் அஜய் சாருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்.
"எனது கதாபாத்திரம் என்னவென்று கேட்டால், 'கோப்ரா' படத்தில் நான் ஏற்றிருந்த வேடத்தைத்தான் சொல்வேன். கதைப்படி இர்ஃபான் பதானுடனேயே எனது கதாபாத்திரமும் பயணம் செய்யும். 'கோப்ரா' என்ற வார்த்தையே என் கதாபாத்திரத்தின் அடிப்படையில்தான் அமைந்தது," என்கிறார் மீனாட்சி.
இந்த இளம் நாயகியின் வயது 25. இவருக்குப் பிடித்த நடிகர் கமல்ஹாசன். ஏதாவது ஒரு படத்தில், ஒரே ஓர் காட்சியிலாவது அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் வாழ்நாள் ஆசையாம்.
"எந்த இளம் நடிகரை ரொம்பப் பிடிக்கும் என்று கேட்கிறார்கள். இதுபோன்ற ஈர்ப்புகள் எல்லாம் வயதுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். கமல் சார் எப்போதுமே பிடித்தமானவர். "ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு அனைவரும் விரும்பக்கூடிய கதையாக உள்ளதா என்பதைக் கவனிப்பேன். அடுத்து எனதுபாத்திரத்தின் தன்மையை ஆராய்வேன். சிறிது நேரம் திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் என் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
"சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். அதனால் பல சோதனை முயற்சிகளில் ஈடுபட போதுமான கால அவகாசம் உள்ளது. இது சாதகமான அம்சம் என்றால் சில சாதகமற்ற அம்சங்களும் உள்ளன.
"எனினும் திரையுலகுக்கு வரும்போது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை," என்கிறார் மீனாட்சி.
'கோப்ரா' பட வெளியீட்டை அடுத்து, புதுப்பட வாய்ப்புகள் தேடி வருவதால் உற்சாகம் அடைந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், இளம் ரசிகர்கள் தம்மை ஆதரிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் மீனாட்சி கோவிந்தராஜன்.
, :
மீனாட்சி கோவிந்தராஜன்

