சிறந்த இயக்குநர் என்று பெயரெடுத்த செல்வராகவன் இப்போது மிரள வைக்கும் நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
'சாணிக்காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து கலக்கியவர், இப்போது 'பகாசூரன்' படத்திலும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர் மோகன் ஜி.
"ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் கதவை மூடிக்கொண்டு அறைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். இதைச் செய்தாலே போதும், நாட்டில் குற்றங்கள் குறையும். கதையைக் கேட்டவுடன் இதில் நடிப்பது எனத் தீர்மானித்துவிட்டேன்," என்கிறார் செல்வா.
இப்படத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பு பேசப்படும் என்று படக்குழுவினர் அடித்துச் சொல்கின்றனர். நட்டி பேசும் நல்ல அறிவுரையுடன் கூடிய வசனங்கள், செல்வாவின் வித்தியாசமான தோற்றம், ஒப்பனை ஆகியவை குறித்து சமூக ஊடகங்களில் பலவிதமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சரி, இயக்குநர் மோகன் ஜி என்ன சொல்கிறார்.
"மகாபாரதத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் தனது அகோரப் பசிக்கு தன் மக்களையே விழுங்கிய அசுரன்தான் பகாசூரன். அந்தக் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கிய கதை இது. அதேசமயம் உண்மைச் சம்பவங்களின் கோர்வையாக இந்தப் படம் இருக்கும். இதுதான் பகாசூரன் என்பதற்கான பெயர்க் காரணம்.
"இந்தப் படத்தின் மிகப்பெரிய இரு கதாபாத்திரங்கள் செல்வராகவன், நட்டி நட்ராஜ். இரண்டுக்குமே வலுவான, அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய இருவர் தேவைப்பட்டனர்.
"யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்று விவாதித்தபோது, 'சாணிக் காயிதம்' படத்தின் சுவரொட்டி வெளியானது. அதில் செல்வராகவன் கொடுத்திருந்த 'போஸ்' என்னை வெகுவாகக் கவர்ந்தது. உடனே அவரை சந்திக்க நேரம் கேட்டு, பின்னர் முழுக் கதையையும் விவரித்தேன்.
"பொறுமையாக உட்கார்ந்து கதை கேட்டவர், 'இந்தப் படத்தில் நான்தான் நடிக்கிறேன்' என்று உறுதியளித்து அனுப்பி வைத்தார்.
"நட்டி நட்ராஜ் சார் என்னுடைய முந்தைய படங்களிலேயே நடிக்க வேண்டியது. ஆனால் அதற்கான வாய்ப்பும் சூழலும் அமையவில்லை. ஆனால் இந்தப் படத்தில் அவரை விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்து எப்படியோ பிடித்துவிட்டேன்," என்கிறார் மோகன்ஜி.
செல்வாவின் நடிப்பு தம்மை மிரள வைத்திருப்பதாக நட்டியும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். நடிப்புக்கு என்று வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் பெறுவதற்கான தகுதி செல்வாவுக்கு உண்டு என்றும் கூறுகிறார்.
"இது எப்படிப்பட்ட கதை. இதில் என்ன பிரச்சினை குறித்து அலசப்பட்டுள்ளது என்பதையெல்லாம் கடந்து செல்வாவின் நடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பத்தடி தூரம் நடப்பதற்குள் ஒரு மனிதன் தனது இயல்பில் இருந்து சட்டென கதாபாத்திரமாகவே நம் முன் நிற்பதை யோசித்துப் பாருங்கள்.
"அந்த வியப்பும் பரவசமும் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை. படப்பிடிப்பு முடியும் வரை அவரை பிரமிப்புடன் பார்த்து ரசித்தேன். அவரது உடல்மொழி, மாறுபட்ட நடிப்பு ஆகியவை தமிழ் சினிமாவுக்கு மிக தாமதமாகக் கிடைத்திருக்கிறது," என்கிறார் நட்டி.

