வரலட்சுமி சரத்குமார், தமிழில் சில படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அப்படங்களைப் பார்த்த தெலுங்கு இயக்குநர்களும் வில்லியாக நடிக்க இயலுமா என்று கேட்கிறார்களாம். அவ்வாறு கேட்ட இயக்குநர் களிடம் கதை கேட்டு, அது பிடித்தமானதாக இருந்தால் நடிக்கச் சம்மதிக்கிறாராம். கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஷ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. "கதைப்படி படத்தின் முதல் பாதியில் நல்ல பெண்ணாகவும் இடைவேளைக்குப் பிறகு பயங்கர வில்லியாகவும் திரையில் தோன்றுவேன். இதில் எனது முழுத் திறமையையும் வெளிப் படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது," என்கிறார் வரலட்சுமி.
போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசு தீவிர நட வடிக்கை எடுக்கவேண்டும் என நடிகர் கார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போது போதைப் பழக்கம் பள்ளிகளிலும் கூட மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத் துள்ளது என்றார்.
"இதுதான் உண்மை நிலை. மதுபானம், சிகரெட் உள்ளிட்டவற்றை அவற்றின் வாசம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆனால் சில போதைப்பொருள்களின் வாசம் கூட தெரிவதில்லை. சில இடங்களில் போதைப்பொருள் என்பதே தெரியாமல் அவற்றை சிலர் விற்பனையும் செய்து வருகின்றனர். குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்," என்றார் கார்த்தி.
ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. முதல் கணவர் அஸ்வினை விவாகரத்து செய்த பின்னர் தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா. முதல் கணவர் மூலம் பிறந்த மகன் வேத், சௌந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில், விசாகன் - சௌந்தர்யா தம்பதியர்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சௌந்தர்யா.

