பொறியியல் பட்டதாரி, திரைப்பட நாயகி, 'மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் புகைப்படத்துக்கான 'ஆக அழகான முகம் கொண்ட அழகி' (ஃபோட்டோஜெனிக்) என்று காவ்யா ஷெட்டி குறித்து பேச நிறைய விஷயங்கள் உள்ளன.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து முடித்துள்ளவர், இப்போது 'கேப்டன்' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்துக்கு வந்துள்ளார்.
காவ்யாவின் சொந்த ஊர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மெங்களூரு. எனினும் தமக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகச் சொல்கிறார்.
பொறியியல் படிப்பை முடித்த கையோடு இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் காவ்யா.
அதில் சிறப்புப் பட்டத்தை வென்ற பின்னர், தமிழகம் சார்பாக மீண்டும் ஒருமுறை அழகிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.
"அதன் பின்னர் சென்னையில் சில காலம் தங்கியிருந்தபோது பல்வேறு விளம்பரப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானேன். இதன் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமாக முடிந்தது. எனினும் எனது முதல் திரைப்படம் கன்னடத்தில்தான் வெளியானது.
"அதையடுத்து வாய்ப்புகள் தேடி வந்ததால் இருபது படங்களில் நடித்து முடித்துவிட்டேன். ஆனால் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் குறைந்தபாடில்லை.
"அப்போதுதான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான 'இது என்ன மாயம்' பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் தரமான படைப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
"இதையடுத்து தமிழில் உடனடியாக அடுத்த படத்தில் நடிக்க முடியவில்லை. பிற மொழிகளில் நடிக்க ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் காத்திருந்தன. ஒருவழியாக அவற்றை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் தமிழ் பக்கம் திரும்பியபோதுதான் 'கேப்டன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் அளித்தார்.
"இந்தப் படத்தில் நான்தான் கதாநாயகி என்று அவர் சொன்னபோது வியப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை.
"கதையை விவரித்தபோதே எனக்கும் கதாநாயகனுக்கு இணையாக சில சண்டைக்காட்சிகள் இருக்கும் என்றார். அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றேன்," என்கிறார் காவ்யா.
கன்னடப் படங்களில் சில சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளாராம். குறிப்பாக காவல்துறை சம்பந்தப்பட்ட படங்களில் நடித்த முன் அனுபவம் இப்போது கைகொடுத்ததாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் நடிப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்பவர், குறிப்பிட்ட எந்த மொழிக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை என்கிறார்.
எந்த மொழியாக இருந்தாலும் தனிப்பட்ட வகையில் மனநிறைவு தரக்கூடிய கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறாராம்.
"அதே சமயம் கன்னடப் படங்களில் நடிப்பது சற்று எளிதாக உள்ளது எனக் கருதுகிறேன்.
"ஆனால் ஒரு நடிகையாக அனைத்து மொழிகளிலும் பணியாற்றும் விதம் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது," என்று சொல்லும் காவ்யா, தினமும் சில நிமிட உடற்பயிற்சி, வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவது, இனிமையான பயணங்களை மேற்கொள்வதுதான் தமது அழகின் ரகசியம் என்கிறார்.
, :

