கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் நன்றாக உள்ளதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
எனவே 'மாநாடு' படத்தைப் போன்று இதுவும் வசூலில் சாதிக்கும் என சிம்பு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
படம் குறித்த நல்ல கருத்துகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் இந்தப் படத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா.
முன்னதாக படத்தை வெளியிடுவதில் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் தயாரிப்புத் தரப்பு மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து குறித்த நேரத்தில் படம் வெளியானது.
உலகெங்கிலும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'வெந்து தணிந்தது காடு' படம் வெளியீடு கண்ட நிலையில், தமிழகத்திலும் குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும் மட்டும் நேற்று அதிகாலை வேளையில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சிம்பு ரசிகர்கள் திரளாக வந்து படத்தைக் கண்டு ரசித்துப் பாராட்டினர்.
முத்து என்கிற 19 வயது இளைஞன் ஒரு விபத்து காரணமாக பிழைப்பு தேடி மும்பைக்குச் செல்கிறான். அங்கு எதிர்பாராத விதமாக குண்டர் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் நாயகன், பின்னர் தாமே அத்தகைய கும்பலில் ஒருவராக மாற நேரிடுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
இதில், சித்தி இத்னானி நாயகியாகவும் ராதிகா சரத்குமார் நாயகனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளனர். இசை ஏ.ஆர்.ரகுமான்.

