தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் வெளி மாநிலம், வெளிநாடுகளில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தாமல், தமிழகத்திலும் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பலன் கிடைத்துள்ளது.
மீண்டும் பழையபடி கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றன. 'இந்தியன் 2', 'ஜெயிலர்', 'வாரிசு', அஜித்தின் 61வது படம், சூர்யா- சிவா கூட்டணியில் உருவாகும் படம் என சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் படங்களின் பட்டியல் மேலும் நீள்கிறது.
இதில் 'இந்தியன் 2', 'ஜெயிலர்' ஆகிய இரு படங்களையும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரையில் காண முடியும். விஜய்யும் அஜித்தும் பொங்கலையொட்டி திரையில் மோத உள்ளனர்.
இப்படங்களின் நிலவரங்கள் குறித்துப் பார்ப்போம்.
'ஜெயிலர்'
ரஜினியின் கடைசி மூன்று படங்களுக்கான படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஹைதராபாத்தில்தான் நடைபெற்றது. 'பேட்ட', 'தர்பார்', 'அண்ணாத்த' ஆகிய அம்மூன்று படங்களும் எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை என்றும் அதனால் தயாரிப்புத்தரப்பு ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றன.
இதையடுத்து, ஹைதராபாத்துக்குப் பதிலாக இம்முறை சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளார் ரஜினி. இதனால், 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட விரைவாக நடந்து முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பீஸ்ட்' படத்தில் விஜய்யின் தோற்றத்தையும் படத்தைப் பற்றிய தகவல்களையும் தயாரிப்பு நிறுவனத்தாரும் இயக்குநரும் பத்திரப்படுத்திப் பாதுகாத்து வந்தனர். ஆனால், அதன் மூலம் கிடைத்த அனுபவத்தினால் 'அளவுக்கதிகமாக மிகைப்படுத்துவது வெற்றிக்கு உதவாது' என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ரஜினி.
அதனால்தான் 'ஜெயிலர்' படம் குறித்து அறிவித்த வேகத்திலேயே ரஜினியின் முதல் தோற்றத்தை வெளியிட்டு அதில் நடிகர்களின் பெயர்களையும் படக்குழு அறிவித்தது.
சென்னைக்கு அருகே உள்ள பனையூர், பூந்தமல்லி பகுதிகளில் உள்ள ஸ்டூடியோவிலும் திறந்தவெளியில் அரங்கு அமைத்தும் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த உள்ளனராம்.
'இந்தியன்-2'
தெலுங்கில் 'ராம்சரண்' படம், தமிழில் 'இந்தியன்-2' என ஒரே சமயத்தில் இரு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் சங்கர்.
'இந்தியன்' இரண்டாம் படம் கிடப்பில் போட்ட நிலையில், கமலின் 'விக்ரம்' படத்திற்குக் கிடைத்த வெற்றி தயாரிப்புத்தரப்பை உசுப்பி விட்டது.
மேலும், 'விக்ரம்' படத்தை வெளியிட்ட உதயநிதியும் தாமே முன்வந்து லைகா நிறுவனத்திடம் நேரடியாகப் பேச, 'இந்தியன்-2' மீண்டும் வளரத் தொடங்கி உள்ளது.
இடையில், 'ராம்சரண்' படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால், கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி 'இந்தியன்-2' படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளார் சங்கர்.
அஜித், விஜய் படங்கள்
விஜய்யின் 'வாரிசு' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக உருவாகிறது.
தொடக்கத்தில் ஹைதராபாத்திலும் விசாகப்பட்டினத்திலும் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெறுகிறது. விரைவில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்க உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்பதால், அக்டோபர் இரண்டாம் வாரத்துக்குள் தனக்கான காட்சிகளை முடித்துக்கொடுக்க உள்ளாராம் விஜய். மேலும், அவர் பல்கேரியா நாட்டில் ராஷ்மிகாவுடன் டூயட் பாட உள்ளார்.
அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில்தான் தொடங்கியது. படத்தைத் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் படப்பிடிப்பை நடத்தலாம் என்று கூறிவிட்டார் அஜித். வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையிலும் சில சாகசக் காட்சிகள் ஹைதராபாத்திலும் அடுத்தடுத்து படமாக்கப்பட உள்ளன.
, :

