'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் சிம்பு ரசிகர்களுக்குப் பிடித்த கதாநாயகி ஆகிவிட்டார் சித்தி இட்னானி.
தமிழ்த் திரையுலகத்துக்கு புதிதாக வந்து சேர்ந்துள்ள இவரது சொந்த ஊர் மும்பை. தாயார் தொலைக்காட்சி நடிகை. தந்தை குரல் வள நிபுணர்.
சிறு வயது முதலே ஏதாவது பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதாகச் சொல்லும் சித்தி இட்னானி, மேடை நாடகத்தில் நடிக்க முறைப்படி பயிற்சி பெற்றவர்.
"நாடகங்களில் நடிக்கத் தொடங்கியது முதல் என்னைப் பற்றி பலருக்குத் தெரியவந்தது. குஜராத்தி மொழியில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடிவந்தன. சில படங்களில் நடித்த பிறகு தமிழில் அறிமுகமாகி உள்ளேன்.
"உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தமிழ் சினிமா குறித்து எனக்கு அதிகம் தெரியாது. அதிகமான தமிழ்ப் படங்களும் பார்த்தது கிடையாது. சென்னைக்கு வந்த பிறகுதான் தமிழில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகள் குறித்து தெரியவந்தது.
"இதற்கு முன்பு ரஜினி, கமல் ஆகிய இருவரைப் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும்," என்று சொல்லும் சித்திக்கு, இயக்குநர் கௌதம் மேனன் எளிதில் வாய்ப்பு வழங்கிவிடவில்லை.
மற்ற புதுமுகங்களைப் போலவே சித்திக்கு நடிப்புத் தேர்வு வைத்துள்ளார். இதற்காக அவர் மெனக்கெட வேண்டியிருந்ததாம்.
"முந்தைய நாள் இரவு என்னைத் தொடர்புகொண்ட இயக்குநரின் உதவியாளர், மறுநாள் நடிப்புத் தேர்வு என்று தகவல் கொடுத்தார். உடனே என்னைத் தயார்படுத்திக் கொண்டு அதிகாலை நான்கு மணிக்கு மும்பையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன்.
"தேர்வு முடிந்த கையோடு நான்தான் படத்தின் நாயகி என்று அறிவித்துவிட்டனர். எனக்கான முதல் காட்சியே சிம்புவுடன்தான். வசனத்தை ஒரே மூச்சில் பேசி முடித்தேன்.
"சிம்பு போன்ற ஒரு பெரிய நடிகர் முன்னால் நின்று நடிக்கும்போது பயம், பதற்றம் எல்லாம் நாம் அழைக்காமலேயே வந்துவிடும். பிறகு ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியதும், 'மாநாடு' படத்தின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். அவரும் என்னிடம் அமைதியாக, 'உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி நடியுங்கள்' என்றார்.
"இந்தப் படத்தில் எனக்குச் சில சவாலான காட்சிகளும் இருந்தன. குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியில் மிகவும் உணர்வுபூர்வமாக நடிக்க வேண்டி இருந்தது. சிம்பு அளவுக்கு நடிக்கவில்லை என்றாலும், அவரது தரமான நடிப்பை கெடுத்துவிடும் வகையில் எனது நடிப்பு இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்," என்கிறார் சித்தி இட்னானி.
அடுத்து இயக்குநர் சசியின் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்துள்ளாராம். மேலும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எதிர்பார்த்து காத்திருப்பதாகச் சொல்கிறார்.
"சிம்புவுடன் நடித்ததால் எனக்கான மதிப்பு அதிகரித்துள்ளது. நிறைய பேர் புதுப்புது கதைகளுடன் அணுகுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை எதற்காகவும் அவசரப்படுவதாக இல்லை. தமிழில் நேரடியாக நடித்துள்ள முதல் படத்தில் எனது நடிப்பு எப்படி உள்ளது, ரசிகர்கள் வரவேற்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்," என்கிறார் சித்தி.
படப்பிடிப்பின்போது சிம்புவுடன் அதிக நேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் அமைந்தனவாம். அப்போது நிறைய அறிவுரைகளை வழங்கினாராம் சிம்பு.
"சிம்பு மிகுந்த அர்ப்பணிப்புள்ள நடிகர், இந்தப் படத்திற்காக அவரது உடல் தோற்றத்தில் நிறைய வித்தியாசங்களைக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் கடுமையாக உழைத்திருக்கிறார்.
"இதற்காக தாம் பின்பற்றிய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்யும் முறை குறித்து என்னிடம் விவரித்தார். தன் ரசிகர்கள் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் கொண்ட கதாநாயகன் அவர். அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் சித்தி இட்னானி.
சிம்பு ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் சித்தியைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஒரேயோர் தமிழ்ப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர் களின் மனதில் தமக்கு இடம் கிடைத்தி ருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் தொடர்ந்து தமக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என நம்பிக்கை உள்ளதாகவும் கூறுகிறார் சித்தி அட்னானி.
, :

