'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றி நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சிம்பு, தாம் இதுவரை நடித்துள்ள படங்களில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்த படம் இதுதான் என்றார்.
"இந்தப் படம் வெளியாகும் முன்பு ரசிகர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று நினைத்து கவலைப்பட்டேன். ஆனால் படத்துக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
"இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி. இந்த வெற்றியைப் பார்க்கும்போது, இது கனவா அல்லது உண்மையா எனும் வியப்பு ஏற்படுகிறது.
"படம் குறித்த விமர்சனங்கள்தான் இந்த வெற்றிக்குக் காரணம் என நம்புகிறேன். 80 விழுக்காட்டினர் நல்லவிதமாக விமர்சனம் செய்துள்ளனர்.
"திரையுலகில் நம் காலை இடறிவிட, நம்மைத் தட்டிவிட நிறைய பேர் உள்ளனர். தட்டிக்கொடுக்கத்தான் அதிகமானோர் இல்லை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதிகம் பேசுவதற்கில்லை. எனினும் ஜனரஞ்சகமான, ரசிகர்கள் குரலெழுப்பி மகிழ்வதற்கான சில அம்சங்களைச் சேர்த்தால் நன்றாக இருக்கும்," என்ற சிம்பு, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யும் போக்கு மாறவேண்டும் என்றார்.
தனிமனித விமர்சனம் மூலம் பிறர் மனதை நோகடிக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்த அவர், உருவக் கேலியையும் சாடினார்.
உருவத்தை அடிப்படையாக வைத்து தம்மைப் பற்றியும் சிலர் விமர்சித்துள்ளதாகக் குறிப்பிட்ட சிம்பு, இதுபோன்ற செயல்கள் சம்பந்தப்பட்டவர்களை வெகுவாகப் பாதிக்கும் என்றார்.
"தமிழில் ஒரு புது முயற்சியை மேற்கொள்வோமா என்று என்னிடம் கேட்டார் கௌதம் மேனன். அவர் சொன்ன கதை மிக சுவாரசியமாக இருந்தது. இப்போது அந்த முயற்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியைப் பார்க்கும்போது சரியான முடிவெடுத்திருப்பதாகத் தோன்றுகிறது," என்றார் சிம்பு.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கௌதம் மேனன், இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'மல்லிப்பூ' என்ற பாடல் குறித்த ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள அப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், தொடக்கத்தில் அந்தப் பாடலுக்கு என படத்தில் இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் கடைசி நேரத்தில்தான் அது படத்தில் சேர்க்கப்பட்டது என்றும் கௌதம் மேனன் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற பிரமுகர்கள் 'மாநாடு' படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சிம்பு நடித்துள்ளதாகப் பாராட்டு தெரிவித்தனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு 'வல்லவன்' படத்தை இயக்கி இருந்தார் சிம்பு. அதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் சிம்பு தனது இரண்டாவது படத்தை இயக்கிய பாடில்லை.
இந்நிலையில், ஒரு நடிகராக தமது ஐம்பதாவது படத்தில் நடித்து முடித்ததும், மீண்டும் இயக்குநராகப் போவதாகக் கூறியுள்ளார் சிம்பு.
'வெந்து தணிந்தது காடு' சிம்புவின் 47வது படம். அடுத்து ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இதையடுத்து சிம்புவின் ஐம்பதாவது படத்தை இயக்குநர் ராம் இயக்க உள்ளதாகத் தகவல்.
இம்மூன்று படங்களையும் முடித்தபிறகே தமது இரண்டாவது படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் சிம்புவின் திட்டம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
எனினும் சிம்பு சும்மா இருக்கவில்லை. தாம் இயக்கப்போகும் படத்துக்கான கதையை உருவாக்குவதில் முனைப்பாக உள்ளார்.
அவர் நிறைய கதைகளை எழுதி வைத்துள்ளதாகவும் அவற்றுள் சிறந்த கதையைப் படமாக்கப் போவதாகவும் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
, :
சிம்பு

