அரசியல் படம் எடுக்க துணிச்சல் வேண்டும் என்கிறார் இயக்குநர் அசோக் வீரப்பன். இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'பபூன்'.
வைபவ் நாயகனாகவும் அனகா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
"இதற்கு முன்பு 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' ஆகிய படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளேன். அந்த அனுபவம் கொடுத்த துணிச்சலில்தான் தனியாக ஒரு படத்தை இயக்கி உள்ளேன்.
"மேடை நாடகங்களில் பங்கேற்கும் கோமாளிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வியலையும் பேசியுள்ளோம்.
"நகைச்சுவைப் படமாக இருக்குமோ என்று யோசிக்க வேண்டாம். மாறாக, இது அதிரடியான அரசியல் படம். ஆலங்குடி இளையராஜா, மதுரை எம்.பி.விஸ்வநாதன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காரைக்குடி, ராமேசுவரம், கொல்லம், சென்னை ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது. தமிழ்த் திரையுலகில் எப்போதாவதுதான் முழு நீள அரசியல் கதையம்சம் உள்ள படம் வரும். அரசியல் கதையைச் சொல்ல துணிச்சல் வேண்டும்," என்கிறார் இயக்குநர் அசோக் வீரப்பன்.
படத்தின் நாயகன் வைபவ், அரசியலைக் கதைக்களமாகக் கொண்ட படத்தில் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது என்கிறார்.
"இதுபோன்ற கதைகளில் நடிப்பது ஒரு வகையில் நமக்கான சவால் என்றும் சொல்லலாம். மிக நேர்த்தியான படமாக இதை உருவாக்குகிறார் அசோக் வீரப்பன். அவர் மீதுள்ள நம்பிக்கையால் இப்படத்தில் நடிக்கிறேன்," என்கிறார் வைபவ்.
இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

