'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'எதற்கும் துணிந்தவன்', 'குற்றம் குற்றமே' உள்ளிட்ட படங்களைப் பார்த்தவர்களுக்கு திவ்யா துரைசாமி குறித்து தெரிந்திருக்கும். அடுத்து இணையத் தொடர் ஒன்றில் அவர் நடித்து வருகிறார்.
தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வேண்டும் எனும் விருப்பம் இருந்தாலும், நல்ல குணச்சித்திர கதாபாத்திரங்கள் அமைந்தால் அவற்றையும் ஏற்கத் தயார் என்பதுதான் திவ்யாவின் நிலைப்பாடு.
திருச்சியில் பிறந்து வளர்ந்தவர், பட்டப்படிப்பை முடித்ததும் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தாராம்.
"மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் என்பது முன்பு பெரிய தொகை. என்னுடன் படித்த பலர் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பணிகளைச் செய்தனர். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்காகவும் இருந்தது.
"அப்படிப்பட்ட வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் செய்தி வாசிப்பாளர் பணி காலியாக இருப்பதை அறிந்தேன். என் நண்பர்கள் வாங்கிக் கொண்டிருந்த ஊதியத்தைவிட நான் அதிகம் சம்பாதித்தேன். பல மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் குறுகிய காலத்தில் பலரும் அறிந்த முகமாக மாறினேன்.
"மற்ற பணிகளைவிட ஊடகம், தொகுப்பாளர் பணி எனக்கு மிகவும் பிடித்துப்போனது," என்று கடந்த நாள்களை உற்சாகத்துடன் அசைபோடுகிறார் திவ்யா.
பின்னர் பல செய்தி அலைவரிசைகளில் இவரது முகத்தைக் காண முடிந்தது. அதையடுத்து நடிகையாக வேண்டும் என்ற விருப்பம் இயல்பாகவே தன் மனதில் தோன்றியதாகச் சொல்கிறார் திவ்யா துரைசாமி.
முதற்கட்டமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கலாமா என்று யோசித்தபோது, அவரே எதிர்பாராத வகையில் சினிமா வாய்ப்பு தேடிவந்துள்ளது.
'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நாயகியின் தோழியாக நடித்த பின்னர் சில குணச்சித்திர கதாபாத்திரங்கள் அமைந்தன.
"பிறகுதான் 'எதற்கும் துணிந்தவன்' படத்திலே யாழினி கதாபாத்திரத்தில் நடித்தேன். அதைத் தொடர்ந்து 'குற்றம் குற்றமே' படம் வரை பயணம் நீண்டுள்ளது. நான் இந்த அளவுக்கு திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகையாக வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு என் பெற்றோர்தான் காரணம். ஊடகத்துறை பணி என்றதும் இருவரும் பயந்து போவார்கள், தயங்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவருமே எனக்குப் பக்கபலமாக உள்ளனர்.
"பெண் சுதந்திரம், பெண் கல்வி என்றெல்லாம் பேசுகிறோம். என் பெற்றோர் அதை இயல்பாகவே பின்பற்றுகிறார்கள். அவர்கள் இல்லையென்றால் நானும் இல்லை," என்கிறார் திவ்யா.
திரைத்துறையில் தனது எதிர்பார்ப்பு, இலக்கு என்ன என்று கேட்பவர்களுக்கு தாம் நீண்ட விளக்கத்தையோ, நம்ப முடியாத விஷயங்களைச் சொல்லப்போவதோ இல்லை என்று குறிப்பிடுபவர், எந்தவொரு தருணத்திலும் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும் என்பதே முக்கியம் என்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் எந்த விஷயமாக இருந்தாலும், அதை ஒருமுறை முயற்சி செய்து பார்க்க விரும்புவேன். அதன் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்கும் மனப்பக்குவம் எனக்கு உண்டு.
இதுவரை பெரிய எதிர்பார்ப்புகள் இருந்ததில்லை. நல்ல நடிகை என்று பெயர் வாங்கிக் கொடுக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தயக்கமின்றி ஏற்பேன்.
"என்னைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு கொள்வதில்லை. அவற்றுக்குப் பதிலளிப்பதும் இல்லை.
"அதேசமயம் என் தரப்பில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின், அவற்றை நியாயமான முறையில் சுட்டிக்காட்டினால் தயக்கமின்றி ஏற்பேன்," என்கிறார் திவ்யா துரைசாமி.
, :

