நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன் மீண்டும் நாயகனாக களமிறங்கி உள்ள படம் 'சாமானியன்'.
இதை ராகேஷ் இயக்குகிறார்.
இவர் ஏற்கெனவே 'தம்பிக்கோட்டை', 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
ராமராஜன் ஜோடியாக நக்சா சரண் நடிக்க, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் சுவரொட்டி, குறு முன்னோட்டத் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ராமராஜன் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
"பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் சென்றனர். ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதேபோல ராமராஜன் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறார்.
"முன்பு வனவாசம் சென்று திரும்பியவர்கள் அனைவருமே அரசாண்டதுபோல் இவரும் நிச்சயமாக அரசாள்வார்.
"இவர் நடித்த 'சோலை புஷ்பங்கள்' படத்திலேயே நான் பின்னணிக்குரல் கொடுக்கும் கலைஞராகப் பணியாற்றி உள்ளேன். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக இவருடன் இணைந்து நடிக்கிறேன்.
"இவர் எல்லாம் எதற்கு திரும்பவும் நடிக்க வருகிறார் என்று ராமராஜனை பார்த்து பலர் சமூக ஊடகங்களில் கிண்டல் செய்வதாக கூறுகிறார்கள்.
"நீங்கள் ஏன் சுவாசிக்க வேண்டும் என்று ஒருவரைப் பார்த்து கேள்வி கேட்பது எவ்வளவு அநாகரிகமானதோ, அதேபோன்று ராமராஜனைப் பார்த்து கேள்வி கேட்பதையும் ஏற்க இயலாது," என்றார் எம்.எஸ்.பாஸ்கர்.
ஐந்து மொழிகளில் தயாராகும் 'சாமானியன்' படம் விரைவில் திரைகாண உள்ளது.
'சாமானியன்' பட விழாவில் இயக்குநர் சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர், ராமராஜன்.