அனுஷா செல்வமணி
பிரபல இந்திய இசையமைப்பாளர் டி. இமானின் இசைக் கச்சேரி எஸ்பிளனேட் இசையரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு விமரிசையாக நடைபெறுகிறது.
'8 பாயிண்ட் என்டர்டெய்ன்மெண்ட்' பொழுதுபோக்கு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியில், இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர்களான வைக்கம் விஜயலட்சுமி, ரஞ்சித், ஜிதின் ராஜ், வந்தனா சீனிவாசன், வி.எம்.மகாலிங்கம், ஸ்ரீனிஷா, நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பார்வையாளர்களை இசை மழையில் நனைய வைக்க உள்ளனர்.
'தாண்டவம்' திரைப் படத்தில் இடம்பெற்ற 'ஒரு பாதி கதவு நீயடா' என்ற பிரபல பாடலைப் பாடிய பாடகி வந்தனா சீனிவாசன், இன்று சிங்கப்பூர் மக்களின் மனதுக்கு தன் பாடல்களை கொண்டு சேர்க்கும் தருணத்தை மிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தமிழ் முரசிடம் கூறினார்.
சிங்கப்பூர் மக்களின் அன்பும் அவர்களுடைய இசை ஆர்வமும் தம்மை மெய்சிலிர்க்க வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பாடகர் ஜிதின் ராஜ், இதுவரை தாம் பாடிய பாடல்களில் பெரும்பாலானவை டி.இமான் இசையமைத்த பாடல்கள் என்பதால், இந்த இசைக் கச்சேரியில் பாடுவதற்கு மிகவும் உற்சாகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
நுழைவுச் சீட்டுகள் ஐந்து பிரிவுகளில் விரைவாக விற்கப்பட்டதால், பொதுமக்கள் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள கேம்பல் லேனுக்குச் சென்று முப்பது விழுக்காடு தள்ளுபடிக்கு மூன்று பிரிவுகளுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.

