இன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான குணச்சித்திர, வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ், ஒரு காலத்தில் பெட்ரோல் நிலையம், மருந்துக் கடை என கிடைத்த இடங்களில் எல்லாம் வேலையைச் செய்ததாகச் சொல்கிறார்.
இவரது சொந்த ஊர் சீர்காழி. பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் இவர் தேர்ச்சி பெற மாட்டார் என நண்பர்களும் குடும்பத்தாரும் கருதிய நிலையில், எப்படியோ கரைசேர்ந்துவிட்டார்.
"19 வயதில் ஊரில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்தேன். காரணம், கடையில் வேலை பார்த்தால் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, நாமும் எதிர்காலத்தில் ஒரு மருந்துக் கடையைத் திறக்கலாம் என்ற ஆசைதான்.
"பிறகு சென்னைக்குப் புறப்பட்டேன். அங்கு என் அக்கா இருந்ததால், நம்பிக்கையுடன் சென்றேன். சென்னையில் சில காலம் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னாள்களில் நானே சொந்தமாக ஒரு பெட்ரோல் நிலையத்தை நடத்தினேன். படங்களும் தயாரித்தேன்.
"பொருளியல் ரீதியில் மெல்ல வளர்ச்சி கண்ட நிலையில், நண்பர்கள் சிலர் படத் தயாரிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தினர். ஏதோ ஒரு துணிச்சலுடன் படத்தயாரிப்பாளராக மாறினேன். 25 வயதில் எனக்குத் திருமணமாகிவிட்டது. மனைவி ஆங்கிலோ இண்டியன். இரண்டு மகன்களில் ஒருத்தர் ஆட்டோமொபைல் துறையில் சிறப்பாகச் செயல்படுகிறார். இன்னொரு மகன் சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார்.
"நல்ல திரைப்படம், அடுத்து பத்து பட வாய்ப்புகளைக் கொடுக்கும் என்பது என் விஷயத்தில் உண்மையானது. எனது முதல் படம் 'மாயக்கண்ணாடி'. பிறகு 'பசங்க', 'நாடோடிகள்' என ஆரம்பகால படங்கள் பல எனக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தன. அதன் பிறகு வந்த படங்களிலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன.
"நாங்கள் தயாரித்த 'பொற்காலம்' படம் உருவானபோது இயக்குநர் சேரன் சார் என்னைக் கவனித்துள் ளார். என்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை முதலில் கண்ட றிந்தவர் அவர்தான்," என்கிறார் ஜெயபிரகாஷ்.

