திரையுலகில் அறிமுகமாகாமல் இருந்திருந்தால் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்திருப்பேன் என்கிறார் நிதி அகர்வால்.
தமிழில் சிம்பு ஜோடியாக 'ஈஸ்வரன்', ஜெயம் ரவி ஜோடியாக 'பூமி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நிதி அகர்வால், சினிமாத்துறை தமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றார்.
"நடிப்பு வரவில்லை என்றால் வேறு ஏதாவது வேலைக்கு போ என்று எனது குடும்பத்தினர் சொல்லி இருப்பார்கள். ஒருவேளை நான் நடிக்க வராமல் இருந்திருந் தால் ஆடை வடிவமைப்பு தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொண்டிருப்பேன்.
"சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் எனும் விருப்பமும் எனக்கு உண்டு. அவ்வாறு ஒரு சூழல் அமைந்திருந்தால், நிச்சயம் அலங்காரப் பொருள்கள் தொடர்பான துறையில் சில புதுமைகளைப் புகுத்தி இருப்பேன்," என்றார் நிதி அகர்வால்.
சென்னைக்கு அருகே உள்ள காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் நிதி அகர்வாலுக்கு அவரது ஆதரவாளர்கள் கோவில் கட்டி வருகின்றனர்.
எனினும் இத்தகைய செயல்பாடுகளை தாம் அறவே ஊக்குவிப்பதில்லை என்கிறார் நிதி.
"அதேசமயம் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள என் மீது ரசிகர்கள் இந்த அளவுக்குப் பாசம் காட்டுவது வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிக்கிறது.
"தமிழில் தொடர்ந்து நடிப்பேன்," என்கிறார் நிதி அகர்வால்.
தற்போது நடிக்க வந்துவிட்டாலும், சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் தன் மனதில் இன்னும் நீடித்து வருவதாகச் சொல்பவர், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்.

