கதிரேசன் இயக்கும் 'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
கதிரேசன் இதற்கு முன்பு ஃபைவ் ஸ்டார் நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். இப்போது இயக்குநராக மாறியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
"எனது நிறுவனம் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. 'காஞ்சனா' வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லாரன்ஸ் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் 'ருத்ரன்' என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றும் விதமாக நிறைவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி 'ருத்ரன்' படம் வெளியாகும்," என்கிறார் கதிரேசன்.

