நயன்தாரா வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அவரது சிறு வயது நினைவுகள் தொடங்கி, அண்மையில் நடந்து முடிந்த திருமணம் வரை, நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் இந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல். அனைத்தையும் நயன்தாராவே ஒரு பேட்டி வடிவில் வெளியிடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் திருமண நிகழ்வின் முக்கிய பகுதிகளையும் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெண் 'சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்கள் குறிப்பிட்டாலும், தாம் ஒரு சாதாரணப் பெண்தான் என்று ஆவணப்படத்துக்கான பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.
'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன், அடுத்து தனுஷுடன் கைகோத்துள்ளார். காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகி சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்க இருப்ப தாகக் கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்க உள்ளதாகவும் போனி கபூர் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவுடன் இணைந்து நடித்த கையோடு தனுஷுடன் இணைந்து நடிப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் சித்தி இட்னானி.
இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான எஸ்.வி. ரமணன், 87, வயது மூப்பு காரணமாக கால மானார். இவர் பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தின் தாத்தா ஆவார்.
கடந்த 1930 - 40களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக விளங்கிய கே.சுப்பிரமணியத்தின் மகனான எஸ்.வி. ரமணன், சினிமாவில் பல துறை களிலும் சாதித்தவர்.
மேலும், வானொலி விளம்பரங்களில் பல புதுமைகளைப் புகுத்திய இவர், ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பிறகு ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி நடித்த 'உருவங்கள் மாறலாம்' படத்தை இயக்கி, இசையமைக்கவும் செய்தார்.
ரமணனுக்கு பாமா என்ற மனைவியும் லட்சுமி, சரஸ்வதி என இரு மகள்களும் உள்ளனர். லட்சுமியின் மகன்தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார் ரேவதி.
பல்வேறு மொழிகளில் நடித்தும் படங்களை இயக்கியும் ரசிகர்களின் மனம்கவர்ந்த ரேவதி, ஏற்கெனவே தேசிய விருது, தமிழக அரசு விருது என தனது நடிப்பிற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
எனினும் கேரள அரசின் விருது மட்டும் கிடைக்க வில்லை எனும் ஆதங்கத்தில் இருந்தாராம். இந்நிலையில், கடந்த ஆண்டு ரேவதி நடித்த 'பூதக்காலம்' எனும் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதும் அறிவிக்கப்பட்டது.
விருது விழாவில் பேசிய ரேவதி, சுமார் 40 ஆண்டுகாலம் இந்த விருதுக்காக தாம் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் இவ்விருதை தமக்குத் தாமே அர்ப்பணித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

