'வாரிசு' படத்தின் படப்பிடிப்பைக் காணத் திரண்ட விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் விஜய் குறித்து சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள படக்குழு, சில சண்டைக் காட்சிகளைப் படமாக்கி வருவதாகத் தகவல்.
இதற்காக சென்னை, எண்ணூர் பகுதியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ரகசியம் காத்த போதிலும், இந்தத் தகவல் எப்படியோ வெளியே கசிந்து, நேற்று முன்தினம் ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு நடிக்கும் இடத்தில் கூடிவிட்டனர்.
படப்பிடிப்பு அரங்குக்கு வெளியே வந்து விஜய் தங்களைச் சந்திப்பார் என ரசிகர்கள் காத்துக்கிடக்க, அவரோ படப்பிடிப்பில் மும்முரமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே நேரம் ஆக ஆக, ரசிகர் கூட்டமும் மெல்ல அதிகரித்தபடியே இருந்தது. காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், ரசிகர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதுமான காவலர்கள் இல்லை.
எனவே, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த காவல்துறையினர் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ரசிகர்கள் சிதறி ஓடியதில் சிலருக்கு காயமேற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தடியடிக் காட்சிகள் காணொளிப் பதிவுகளாக சமூக ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து, விஜய்க்கு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"ரஜினி, அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் எல்லாம், ரசிகர்கள் கூடிவிட்டால் தூரத்தில் நின்றாவது அவர்களைப் பார்த்து கையை அசைத்து உற்சாகப்படுத்துகிறார்கள். ஆனால் விஜய்யோ நாங்கள் அவரைப் பார்ப்பதற்காக நீண்ட தூரத்தில் இருந்து வந்து காத்துக்கிடந்த போதும் தூரத்தில் நின்றுகூட எங்களைப் பார்த்து அவர் கை அசைக்கவில்லை.
"இனி நாங்கள் எதற்காக அவரது புதுப்படம் வெளியாகும் போது பதாகைகள் வைத்து, சுவரொட்டி அச்சிட்டு ஆதரவு காட்ட வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. உண்மையான ரசிகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத விஜய்யை இனிமேல் ஆதரிக்க மாட்டோம். எங்களுக்கு நல்ல பரிசு கொடுத்துவிட்டார்," என்று சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே படப்பிடிப்பின்போது ரகசியமாக எடுக்கப்படும் காணொளிகள் இணையத்தில் வெளியாவதைத் தடுக்க கடும் நட வடிக்கைகளை மேற்கொள்ள 'வாரிசு' படக்குழுவுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சிறிது நேரமே திரையில் தோன்றினாலும், விஜய்யுடன் நடித்த காட்சிகள் தனக்கு மனநிறைவைத் தந்துள்ளது என்கிறார் 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா.
சுந்தர்.சி இயக்கத்தில் 'காபி வித் காதல்' படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துள்ள இவர், 'வாரிசு' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
படப்பிடிப்பில் விஜய்யுடன் நடித்து, பழகிய அனுபவம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜய்யின் நடிப்பை, அவரது அர்ப்பணிப்பு உணர்வை நேரில் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். "படப்பிடிப்பின்போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவியாளர்கள் குடைபிடிப்பது வழக்கம். விஜய் சார் அந்தக் குடையைக்கூட தன் கையில்தான் பிடித்திருப்பார். அந்த அளவுக்கு அவர் எளிமையான மனிதர்.
"அவரது நடிப்பை ஒரு படம் வெளியீடு காணும் முன்பே பார்த்து ரசித்த அனுபவம் அலாதியானது," என்கிறார் சம்யுக்தா.

