இளமையாகத் தோற்றம் அளிப்பது சில சமயங்களில் பின்னடைவையும் ஏமாற்றத்தையும் தருவதாகச் சொல்கிறார் வைபவ். தமது தோற்றமே சில நல்ல வாய்ப்புகள் கிடைப்பதை தடுத்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் திரையுலகில் அறிமுகமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இவரது நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட படம் 'பஃபூன்'. அசோக் வீரப்பன் இயக்கி உள்ளார்.
தொடக்கத்தில் நகைச்சுவைப் படமாக கருதப்பட்ட போதிலும், படம் வெளியீடு கண்டதும் அதில் வேறு பல சுவாரசியமான அம்சங்கள் இருப்பது ரசிகர்களுக்குத் தெரியவந்துள்ளது.
"அண்மையில் ஒரு தெலுங்குப் படத்தில் என்னை வில்லனாக ஒப்பந்தம் செய்தனர். அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்க இருந்த வேளையில், வேறு ஒரு நடிகரை வில்லனாக ஒப்பந்தம் செய்ததாகக் கூறினர்.
"காரணம், நான் மிகவும் இளமையாக தோற்றமளிப்பதாக அந்தப் படத்தின் கதாநாயகன் கூறினாராம். வேண்டுமானால் எனது தோற்றத்தை மாற்றிக்கொள்ளத் தயார் என்றேன். அப்போதும் அந்த நடிகர் மனம் மாறவில்லை.
"கதாநாயகர்கள் நல்ல உடற்கட்டுடன், இளமையாக காட்சி தர வேண்டும் என்றுதான் ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால், எனக்கு அந்தத் தோற்றமே எதிரியாகி விட்டது," என்கிறார் வைபவ்.
பல்வேறு தோற்றங்கள், கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்ற விருப்பம் தமக்கும் உள்ள தாகக் குறிப்பிடுபவர், அண்மையில் வெளியான 'பஃபூன்' படம் தமது ஆர்வத்துக்கும் உழைப்புக்கு மான நல்ல சாட்சி என்கிறார்.
"இந்தப் படத்தில் தெருக்கூத்துக் கலைஞராக நடித்துள்ளேன். அதற்காக சிறப்புப் பயிற்சியிலும் ஈடுபட்டேன். இந்தப் படத்தில் தெருக்கூத்து கலை நிபுணரான ஆதன்குடி இளையராஜாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் உடன் இருந்தது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
"மேலும் தெருக்கூத்துடன் தொடர்புடைய ஏராளமான காணொளிப் பதிவுகளையும் பார்த்து விவரங்கள் சேகரித்துக்கொண்டேன். அதன் பிறகு திரையில் என்னை தெருக்கூத்து கலைஞனாக வெளிப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறைந்தன," என்று விவரிக்கும் வைபவ், தொடக்கம் முதலே தாம் மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தான் விரும்பியதாகச் சொல்கிறார்.
மேலும் 'மங்காத்தா', 'மேயாத மான்', 'பேட்டை', 'பெட்ரோமெக்ஸ்' என்று ஒவ்வொரு படத்திலும் தாம் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்றுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். நட்புக்காக சில படங்களில் கௌரவ வேடத்தில் நடிக்க வேண்டி இருந்ததாகவும் தமது ரசிகர்களை வியப்படையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சில பாத்திரங்களை ஏற்று நடித்ததாகவும் சொல்கிறார் வைபவ்.
"மசாலா படங்களில் நாயகனாக நடிப்ப தால் மட்டுமே நான் மசாலா நாயகனாகிவிட முடியாது. அவ்வாறு உருவாக வேண்டு மானால் நானே சொந்தப் படம் தயாரிக்க வேண்டியிருக்கும். நிறைய பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் நான் எதிர்பார்க்கும் படம் உருவாகும். ஆனால் நான் இதை விரும்பவில்லை.
"விஜய் சேதுபதி கடந்து வந்த பாதையைப் பாருங்கள். கடுமையான உழைப்புக்குப் பின்னர் இன்று முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். அவர் இன்று முக்கியமான திரை நட்சத்திரம். இருப்பி னும் அனைத்து வகையான கதாபாத்தி ரங்களையும் ஏற்கத் தவறுவதில்லை.
"எனது காலத்துக்குப் பிறகு நான் நடித்துள்ள படங்கள் குறித்து ரசிகர்கள் பேச வேண்டும். நல்ல காதல் படம் என்றால் 'மேயாத மான்', நட்பை விவரிக்கும் இளையர்களைக் கவரும் படம் என்றால் 'கோவா' என நான் நடித்த படங்கள் ரசிகர்களின் நினைவுக்கு வர வேண்டும். எனக்கு அது போதும்," என்கிறார் வைபவ்.
, :

