'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் ரசிகர்களும் ஊடகங்களும் தன்னைப் பற்றி மீண்டும் பேசத்தொடங்கி இருப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் திரிஷா.
தமது எதிர்காலத் திட்டங்கள், திருமணம் குறித்தெல்லாம் சிலர் தேவையின்றி விசாரிப்பதும் எரிச்ச லூட்டும் வகையில் கேள்விகள் எழுப்புவதும் தமக்கு அறவே பிடிக்கவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் திருமணத்துக்குப் பின்னர் மணமுறிவு செய்துகொள்ளும் தமக்குப் பிடிக்காது என்கிறார்.
"நான் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நிறைய பேர் கேட்கிறார்கள். அவர்கள் அவ்வாறு கேட்கும் விதம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
"எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று சாதாரணமாக கேட்டால் மட்டுமே என்னிடம் இருந்து உங்களுக்கு பதில் கிடைக்கும்," என்கிறார் திரிஷா.
எப்போது திருமணம் என்பது குறித்து தாமே இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அதுகுறித்து எந்தவித திட்டமும் தமக்கில்லை என்கிறார்.
"உண்மையில் எனது திருமணம் குறித்து இதுவரை எந்தத் திட்டமும் இல்லை. அது யாரோடு நான் முழுமையாக இருப்பதாக உணர்கிறேன், எனக்கு யாரைப் பிடிக்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.
"வாழ்நாள் முழுவதும் நான் சேர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்குத் தோன்ற வேண்டும். அப்போதுதான் திருமணம் குறித்து யோசிக்க இயலும்," என்கிறார் திரிஷா.
திருமணத்துக்குப் பிறகு பிரிந்து வாழ்வது, மணமுறிவு செய்துகொள்வது போன்ற செயல்கள் தமக்குப் பிடிக்காது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதுபோன்ற வாழ்க்கையைத் தாம் விரும்பவில்லை என்கிறார்.
"எனக்கு மணமுறிவு மீது நம்பிக்கை இல்லை. திருமணம் ஆன பிறகு மணமுறிவு செய்துகொள்வது தேவையற்றது.
"மணமுறிவு மூலமாக சம்பந்தப்பட்ட இருவருக்கு எந்தவித பயனும் இல்லை என்று நினைக்கிறேன். பலரைப் பார்த்து இதைப் புரிந்து கொண்டுள்ளேன்.
"என்னைச் சுற்றி இருக்கும் நிறைய பேர் திருமணமான பிறகு மனநிறைவு இன்றி தவிக்கிறார்கள். அத்தகைய தவிப்பை ஏற்க நான் தயாரில்லை. அதுபோன்ற திருமண பந்தம் எனக்கு வேண்டாம்," என்கிறார் திரிஷா.
தற்போது நாற்பது வயதைக் கடந்துவிட்ட போதிலும், மூத்த கதாநாயகிகளின் பட்டியலில் திரிஷா பெயர் இன்னும் நீடித்து வருகிறது.
இருபது ஆண்டுகால சினிமா பயணத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ள போதிலும் இன்னமும் தமிழ் ரசிகர்கள் தம்மைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் திரிஷா.

