'பாகுபலி' படத்தின் மூன்றாம் பாகத்தைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு நல்ல சேதியை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜமவுலி.
மூன்றாம் பாகம் குறித்து மிக விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்,
"'பாகுபலி' படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பது காலத்தில் கையில் உள்ளது. இரண்டாம் பாகத்தின் இறுதிக்காட்சியில் மூன்றாம் பாகத்துக்கான தொடர்பு இருக்கும்.
"எனக்கும் அடுத்த பாகத்தை இயக்கும் ஆர்வம் உள்ளது. எனினும், பாகுபலி போன்ற பிரம்மாண்டமான படைப்புகளுடன் பயணம் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
"நாம் தீட்டும் திட்டங்களைச் செயல்படுத்த காலத்தின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. எனினும், இது தொடர்பான நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்," என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவான 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூலைப் பெற்றன. இந்திய திரைப்படங்களில் ஆக அதிகமான வசூலைப் பெற்ற படம் இதுதான்.