தான் ஒருவரைக் காதலிக்கிறேன் என்றும் இத்தகவலை ரசிகர்களிடம் இருந்து மறைக்க விரும்பவில்லை என்றும் ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
''சிலர் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாகப் பேசாமல் இருப்பது ஒருவித மனநிலை. ஆனால், நான் அப்படியல்ல. அதனால்தான் வெளிப்படையாக அறிவித்துள்ளேன்.
"எனது வாழ்க்கையை இரட்டைப்பாதையைக் கொண்டு செல்ல விரும்பவில்லை. ஏற்கெனவே கேமராமுன் நடிக்கும்போது நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தேவையில்லை என முடிவுசெய்துள்ளேன்.
"எல்லோருக்கும் வாழ்க்கையில் துணை முக்கியம். நானும் ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கிறோம். இது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது," என்று ரகுல் பிரீத் சிங் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் தத்துவார்த்தமாகப் பதிவிட்டு வருகிறார் சமந்தா. 'நீங்கள் எப்போதும் தனியாக நடக்க முடியாது', 'விழுந்தாலும் தோற்கவில்லை', 'ஒரு வேளை இதை கேட்க வேண்டி இருந்தால்' என்பன போன்ற வரிகளுடன் அவர் பதிவிடுவது ரசிகர்களை அதிகம் யோசிக்க வைக்கிறது. அண்மையில் சருமப் பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்று திரும்பினார் சமந்தா. அதன் பிறகுதான் அவர் தத்துவார்த்த மாக பதிவிடத் தொடங்கி உள்ளார் என விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
சிறந்த நடிகைக்கான 'ஃபிலிம்ஃபேர்' விருதுகளைப் பெற்றுள்ளார் சாய் பல்லவி. 'ஷியாம் சிங்க ராய்', 'லவ் ஸ்டோரி' ஆகிய இரு படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, தாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் சாய் பல்லவி. "ஒரே ஆண்டில் இரண்டு படங்களுக்கு விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அழகான கதாபாத்திரங்கள் கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். இரு படக்குழுக்களுக்கும் நன்றி," என்று பதிவிட்டுள்ளார் சாய் பல்லவி. தமிழிலும் தெலுங்கிலும் தமக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறுகிறார்.
கால் மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறாராம் ராஷ்மிகா மந்தனா. இதனால் பாடல் காட்சிகளில் முன்புபோல் வேகமாகவும் நீண்ட நேரமும் நடனமாட முடியாமல் அவர் தவிப்பதாகத் தகவல். அண்மையில் உள்நாட்டு மருத்துவரிடம் இதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். எனினும், சிறப்புச் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிவரை ஒதுக்கியுள்ள கால்ஷீட் ஒப்பந்தப்படி நடித்து முடிப்பது என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவது என்றும் அவர் முடிவு செய்திருப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

