'நா நா' என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகும் படத்தை இயக்குகிறார் என்.வி.நிர்மல்குமார். விஜய் ஆண்டனியை வைத்து இவர் இயக்கிய 'சலீம்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்து 'சதுரங்க வேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ள நிலையில், சசிகுமார், சரத்குமார் ஆகிய இருவரையும் வைத்து 'நா நா' படத்தை இயக்கி வருகிறார் என்.வி.நிர்மல்குமார்.
"இது இரட்டை கதாநாயகர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை. யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது சரத்குமாரும் சசிகுமாரும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
"இந்த எண்ணம் தோன்றிய அந்த நொடியில் தொடங்கி இதுவரை தொடர்ந்து திட்டமிட்டு வேலை பார்த்ததன் பயனாக இன்று நல்லதொரு படைப்பை உருவாக்கிய மனநிறைவுடன் பேச முடிகிறது," என்கிறார் நிர்மல்குமார்.
கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் ஓர் எளிய மனிதனை இந்தச் சமூகம் எப்படி உருமாற்றுகிறது என்பதுதான் கதையின் ஒரு வரிச் சுருக்கமாம். சசிகுமார் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் நா.நாராயணன். அதைச் சுருக்கி, 'நா நா' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
"ஒரு சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. வேண்டுமானால் அதை உருமாற்றலாம். அப்படி உருமாற்றப்பட்ட ஒருவனின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம். சசிகுமார் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது.
"மேலும், படத்தில் காதல் காட்சிகளோ பாடல்களோ இடம்பெறவில்லை.
"ஏற்கெனவே தெலுங்கில் அறிமுகமானவரை தமிழுக்கு அழைத்து வந்துள்ளோம். இவர்களைத் தவிர, பாரதிராஜா, டெல்லி கணேஷ், மயில்சாமி, ரமா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஹர்ஷவர்த்தன் என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறோம்.
"தெலுங்குப் படங்களில் நடித் துள்ள சித்ரா சுக்லா என்பவர்தான் இப்படத்தின் நாயகி.
"ஒருவர் திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் தேடி வந்து உதவி செய்தால், அவரைச் சந்தேகப்பட வேண்டும் என்ற ஆழமான தகவல் ஒன்றையும் இந்தப் படத்தின் வழி ரசிகர்களிடம் தெரிவிக்க முயன்றுள்ளோம்," என்கிறார் நிர்மல்குமார்.
இந்தக் கதையைக் கேட்டதும் நாயகன் சசிகுமார் வியப்படைந்தாராம். இப்படியொரு கதையை ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது என்று பலமுறை கேட்டு விளக்கம் பெற்றாராம்.
"இது அவருடைய படம் என்பதுதான் சரி. கதைப்படி மும்பைக்குச் செல்லும் கதாநாயகனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லப் போகிறோம்.
"சரத்குமாரிடம் கதையைச் சொல்லி முடித்த அடுத்த நிமிடமே, 'படப்பிடிப்புக்கு கிளம்ப நான் தயார்' என்றார். காவல்துறை அதிகாரியாக மிகக் கச்சிதமாக நடித்துள்ளார்.
"சரத்குமார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் சசிகுமார். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடித்தனர்.
"கதை படமாக்கப்பட்ட விதம் மனநிறைவு அளிப்பதாக இருவரும் கூறினர். அதனால் எனக்கு மனநிறைவும் நிம்மதியும் ஏற்பட்டது.
"என் குருநாதர் பாரதிராஜா. அவருடன் 'ஈரநிலம்' படம் தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை பணியாற்றினேன். 'நா நா' திரைப்படம் ஒரு நடிகராகவும் அவருக்குப் பெயர் வாங்கித் தரும்," என்கிறார் இயக்குநர் நிர்மல்குமார்.
'நா நா' படத்தின் வெளியீடு குறித்து மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

