காதலும் நகைச்சுவையும் நிறைந்த படைப்பாக உருவாகி உள்ளது 'ப்ரின்ஸ்' திரைப்படம். தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அனுதீப் தமிழில் இயக்கியுள்ள முதல் படம் இது.
தேவையற்ற கவர்ச்சி, வீண் வன்முறை என்று முகம் சுளிக்க வைக்கும் எந்தவொரு அம்சமும் தன் படத்தில் இருக்காது என்று இப்போதே உத்தரவாதம் அளிப்பதாகவும் 'ப்ரின்ஸ்' குடும்பத்துடன் திரையரங்கு சென்று ரசிக்கும் படைப்பாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
அன்றாட வாழ்க்கையில் தேவையற்ற பதற்றத்துக்கும் கோபத்துக்கும் இடமளிக்கக்கூடாது என்பவர், எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பவர்களால் நிறைய சாதிக்க முடியும் என்பதை இந்தப் படம் வலியுறுத்தும் என்கிறார்.
"காதலுக்கு எல்லையே இல்லை என்று சொல்கிறோம். அந்தக் காதல் எப்போது மனதில் தோன்றும், எப்போது வெளிப்படும் என்பதை யாராலும் கணிக்க இயலாது.
"தமிழ்நாட்டுப் பையனுக்கும் பிரிட்டிஷ் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்கிறது. அந்த உறவு திருமணத்தில் முடியும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்ன, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதுதான் கதைக்கரு. துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு ஜோடியின் கதை இது. காதலிப்பதில் தவறில்லை. ஆனால் வாழ்க்கையை கோட்டை விட்டுவிடக்கூடாது. அவ்வாறு சாதித்துக் காட்டும் காதலர்களைப் பற்றி இந்தப் படம் பேசும்," என்கிறார் அனுதீப்.
தாம் எழுதியுள்ள கதைக்கு சிவகார்த்திகேயன்தான் பொருத்தமாக இருப்பார் என்பதை முடிவு செய்த பிறகுதான் அவரை நேரில் சந்தித்தாராம். அப்போது அனுதீப் இயக்கிய 'ஜதி ரத்னலு' தெலுங்குப் படம் சிறப்பாக இருந்ததாக சிவா பாராட்ட, அனுதீப் நெகிழ, படத்தின் தயாரிப்புத் தரப்பு, உடனே படப்பிடிப்பை தொடங்கத் தயார் என்று களத்தில் இறங்கிவிட்டது.
"இன்றைய தேதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ள நாயகன் என்றால் அது சிவாதான். எல்லாருமே அவரை ரசிக்கின்றனர். நம்முடைய குடும்ப உறுப்பினர் என்று சொல்லும் வகையில் அனைவருக்கும் நெருக்கமானவராக உள்ளார்.
"அனைவரையும் மகிழவும் நெகிழவும் வைக்கும் மந்திர சக்தி அவரிடம் இருப்பதாகக் கருதுகிறேன். காதலுக்கு இணையாக நகைச்சுவைக்கும் இடம்கொடுத்திருப்பதைப் பாராட்டினார். மக்கள் இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அறிவுரை கூறும், வன்முறையைத் தூண்டும் கதைக்களம் வேண்டும் என்று தொடக்கத்திலேயே முடிவு செய்துவிட்டுத்தான் பட வேலைகளைத் தொடங்கினேன்.
"அறிமுக நாயகனைப் போல் களத்தில் பம்பரமாகச் சுழன்றார் சிவா. பெரிய நாயகனாக உருவெடுத்த பிறகும் முதல் படத்தில் நடிப்பதுபோல் அக்கறையும் அர்ப்பணிப்புமாய் அவர் செயல்படுவது மகிழ்ச்சி அளித்தது," என்கிறார் அனுதீப்.
கதாநாயகி மரியா மிக அழகாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் குறிப்பிடுவதை தாம் அறிந்திருப்பதாகக் கூறுபவர், மரியாவை கண்டுபிடிப்பதற்குள் படாதபாடு பட்டதாகச் சொல்கிறார்.
"வெளிநாட்டு நாயகிதான் தேவை என்று முடிவானதும் அதற்கான வேட்டையைத் தொடங்கினோம். தேடாத ஊர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு சல்லடை போட்டு தேடிப்பார்த்தும், என் கதைக்கு ஏற்ற நாயகி கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களிலும் வலைவீசினோம். ஆனால் பலன் இல்லை.
"பிறகு திடீரென ஒருநாள் மரியாவைப் பற்றி கேள்விப்பட்டேன். நேரில் சந்தித்தபோது உக்ரேனில் வசிக்கிறார் என்பது தெரியவந்தது. அழகு, குழந்தைத்தனம், சுட்டித்தனம் என எல்லா குணாதிசயமும் நிறைந்த இளம் பெண்ணாக எங்கள் முன்வந்து நின்றார்.
"தமிழில் பேசவும் நடனமாடவும் கற்றுக் கொடுத்தோம். எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்தோம். அவரோ நடனத்தில் அசத்துகிறார். தமிழில் பேசினால் நன்கு புரிந்துகொள்கிறார்.
"கதைப்படி அவரால் சிவாவின் தூக்கம் கெடும். அதேபோல் இளையர்களின் தூக்கமும் கெட்டுப்போகும். மரியாவின் வெள்ளந்திச் சிரிப்பும் அழகும் தமிழ் ரசிகர்களை நிச்சயம் கவரும். இளையர்களை அவர் பக்கம் சாய வைக்கும்," என்று சொல்லி குறும்பாகச் சிரிக்கிறார் அனுதீப்.

